திருப்பூர் : பள்ளி விடுமுறை என பெற்றோர்களுக்கு வாய்ஸ் மெசேஜ்

கள்ளக்குறிச்சி அருகே மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தனியார் பள்ளி சூறையாடப்பட்டது எதிரொலியாக, திருப்பூரில் தனியார் பள்ளிகள் சில விடுமுறை அளித்து பெற்றோர்களுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளது.   கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில்,…

கள்ளக்குறிச்சி அருகே மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தனியார் பள்ளி சூறையாடப்பட்டது எதிரொலியாக, திருப்பூரில் தனியார் பள்ளிகள் சில விடுமுறை அளித்து பெற்றோர்களுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளது.

 

கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில், 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக நேற்று வன்முறை வெடித்தது. அப்போது, மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியில் அத்துமீறி நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியதோடு, பள்ளி வாகனங்கள், பாதுகாப்பிற்காக வந்த போலீஸ் வாகனங்களையும் தீயிட்டு எரித்தனர்.

 

இதனால், வன்முறையை தடுக்க அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் கலவரம் தொடர்பாக 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறை நடைபெற்ற வீடியோ காட்சிகளை வைத்து மேலும் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இதனிடையே, மாணவி உயிரிழந்த விவகாரத்தை மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை (சிபிசிஐடி) விசாரணைக்கு மாற்றியும் உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

 

இதனிடையே, பள்ளியை போராட்டக்காரர்கள் சூறையாடியதால், பள்ளியில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களின் பாதுகாப்பிற்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறி தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தனர். ஆனால் அரசு சார்பில் எந்த பள்ளிகளும் விடுமுறை அளிக்கக்கூடாது என தெரிவித்திருந்தது. மேலும் விடுமுறை அறிவிக்கும் தனியார் பள்ளிகள் மீது மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை எடுப்பார் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருப்பூரில் உள்ள சில தனியார் பள்ளிகள் இன்று விடுமுறை அறிவித்துள்ளனர். பாரதி வித்யா பவன் உள்ளிட்ட பள்ளிகள், மாணவர்கள் வரவேண்டாம் என அறிவித்துள்ளனர். இது தொடர்பாக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் மொபைல் எண்ணுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் பள்ளி விடுமுறை எதற்காக என்ற காரணத்தை தெரிவிக்காமல் பள்ளி இன்று விடுமுறை என்று மட்டுமே தெரிவித்துள்ளனர்.

 

இதனிடையே, திருப்பூர் மாவட்டத்தில் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகத்தின் எச்சரிக்கையை மீறி விடுமுறை விடப்பட்டுள்ள பள்ளிகள் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வினீத் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் இயங்காது என்று மாணவர்களுக்கு தொலைபேசி மூலமாக அறிவிப்பு விடப்பட்டுள்ளது. நாமக்கல்லில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி, சி.பி.எஸ்.சி, அரசு உதவிப்பெறும் பள்ளிகள் என 192 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 31 மெட்ரிக் பள்ளிகளில் 23 மெட்ரிக் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தெரிவித்துள்ளார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.