திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அமைந்துள்ள இரும்பு ஆலை காற்று மாசை ஏற்படுத்துவதால்,அதன் உரிமத்தை புதுப்பிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள அனுப்பட்டி கிராமத்தில் கண்ணப்பன் என்பவருக்கு சொந்தமான தனியார் பழைய இரும்புகளை உருக்கும் ஆலை ஒன்று
கடந்த 14 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.ஆனால் இந்த ஆலையானது அரசின் சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதியை பெறாமலும்,ஆலையை சுற்றி பசுமை வளாகங்கள் அமைக்கப்படாமலும் இயங்கி வருகிறது என கூறப்படுகிறது.
மேலும் இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளை முறையாக சுத்திகரிப்பு செய்யப்படாமலும் வெளியேற்றுகின்றனர்.அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் ஆலையில் இருந்து வெளியேறும் அதிகமான புகையினால் இப்பகுதியை சுற்றியுள்ள மக்களுக்கு நோய் தாக்கும் அபாயமும் அதிகரித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இந்த ஆலையின் அனுமதி இம்மார்ச் மாதத்தோடு நிறைவடைகிறது,எனவே ஆலையை மீண்டும் இயக்குவதற்கான உரிமத்தை அரசு வழங்க கூடாது எனக்கூறி அப்பகுதியை சேர்ந்த மக்களுடன் இணைந்து தமிழக விவசாயிகளின் சங்கத்தின் சார்பாக இன்று வட்டாச்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்லடம் காவல் நிலைய துணை கண்காணிப்பாளர் சௌமியா தலைமையில் 200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.இந்நிலையில் திட்டமிட்டபடி வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் கைதுசெய்யப்பட்டு அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டப்பத்தில் தங்க வைக்கப்பட்டனர்.பின்னர் மாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விடுவிக்கப்படுவர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
-வேந்தன்