திருப்பூர் ரயில் நிலையம் அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை வைக்க அனுமதி வழங்கப்படவில்லை என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பொது இடங்களில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடந்த அக்டோபர் மாதம் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் திருப்பூரைச் சேர்ந்த திருமுருக தினேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியத்திற்கு எழுதிய கடிதத்தில், திருப்பூர் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் அருகே விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை வைக்க திட்டமிடப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து விளக்கமளிக்க உள்துறை செயலாளர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், திருப்பூரில் கருணாநிதி சிலை வைக்க அனுமதி கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை, உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி மாவட்ட ஆட்சியர் நிராகரித்துவிட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், அந்தக் கடிதமும் தாக்கல் செய்யப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, வழக்கை முடித்துவைத்தார்.








