திருப்பதியில் ஐபிஎல் கிரிக்கெட்டை மையமாக வைத்து சூதாடிய கும்பலை சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தியாவில் கிரிக்கெட்டை பலப்படுத்தும் நோக்கில் கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட சம்மேளனம் சார்பில் இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.தற்போது உலகெங்கும் ஐபிஎல் போட்டிகளுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.அவ்வப்போது இப்போட்டிகள் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்தாலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சூதாட்டத்தில் சிக்கியது தொடர்பாக இரண்டு அணிகள் தடை செய்யப்பட்டு பலரையும் புருவம் உயர்த்த செய்தது.தற்போதுதான் எந்த பிரச்னையும் இன்றி ஐபிஎல் போட்டிகள் நடக்கின்றன.
இந்நிலையில் திருப்பதியில் சூதாட்டம் தொடர்பான சர்ச்சைகள் வெடித்துள்ளன. ஹைதரபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் ஹைதரபாத்-மும்பை அணிகளுக்கு இடையே போட்டி நேற்று நடந்த நிலையில் டிக்கெட்டுகள் கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. இதனை தொடர்ந்து போலீசார் சைபராபத் பகுதியில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதியிலுள்ள வீடு ஒன்றில் கிரிக்கெட் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அங்கு நடத்திய சோதனையில் 11 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களில் நான்கு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து 46 லட்ச ரூபாய், 15 க்கும் மேற்பட்ட செல்போன்கள்,லேப்டாப்,12 லட்ச ரூபாய் வங்கி கணக்கில் இருப்பதற்கானஆவணங்கள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய ஏழு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
—வேந்தன்







