டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிக் டாக் என்ற சமூக வளைதளத்தில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பிரபலமானோர் பலர். திறமைகளை வெளிப்படுத்தும் நல்ல கருவியாக டிக் டாக் பயன்பட்டு வந்த நிலையில் அதில் எதிர்மறையாக பலரை அநாகரிகமான முறையில் பேசியே பிரபலமனவர்களும் உண்டு. ரவுடி பேபி சூர்யாவும் அதில் ஒருவராவார்.
டிக் டாக் மற்றும் யூடியூபில் அநாகரிமான முறையில் பேசி சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவு செய்ததால் பல சிக்கலுக்கு இவர் ஆளானார். இந்த பிரச்னைகள் அவரை உயிரிழப்புக்கு முயற்சி வரை கொண்டு சென்றது. இருப்பினும் அவர் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பதிவிடுவதை நிறுத்தவில்லை.
பிரச்னைகளின் தொடர்ச்சியாக, கடந்த ஜனவரி மாதம் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடத்தி வந்த யூடியூப் சேனல் பற்றி அநாகரிமான முறையில் பேசியதாக அந்த இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் ரவுடி பேபி சூர்யாவும் அவரது நண்பர் சிக்காவும் குண்டர் சட்டத்தின் கீழ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே குழந்தைகள் பற்றி சமூக வலைதளங்களில் அநாகரிகமாக பேசி வீடியோ வெளியிட்டதாக கடந்த ஜனவரி 4 – ம் தேதி சைபர் கிரைம் மூலம் சூர்யாவும் அவரது ஆண் நண்பர் சிக்காவும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் சிக்கா மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில் தற்போது ரவுடி பேபி சூர்யாவும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பரிந்துரையின் பேரில் ரவுடி பேபி சூர்யாவும் அவரது நண்பர் சிக்கவையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.








