முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

அதிமுகவின் மூன்று பயணங்கள்


மரிய ரீகன் சாமிக்கண்ணு

கட்டுரையாளர்

மிகுந்த பரபரப்புகளுக்கும் அரசியல் ஸ்டண்டுகளுக்கும் இடையே நடந்து முடிந்த அதிமுகவின் செயற்குழு பொதுக்குழு கூட்டம் 3 பயணங்கள் மூலம் தற்போது வேகமெடுத்துள்ளது. ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்படுவார் என இபிஎஸ் ஆதரவாளர்கள், சி.வி. சண்முகம், கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் பொதுக்குழு மேடையிலேயே அறிவித்துவிட்டனர். இதனால், பொதுச்செயலாளர் ஆகுவதற்கான காயை இபிஎஸ் ஏற்கனவே நகர்த்தத் தொடங்கியது இதன் மூலம் வெட்டவெளிச்சமாகிவிட்டது. இபிஎஸ் ஆதரவாளர்களால் பொதுக்குழு கூட்டத்தில் அவமதிக்கப்பட்ட சூழலில், பாதியிலேயே வெளியேறிய ஓபிஎஸ் நேற்று மாலை டெல்லிக்கு பயணித்துள்ளார். இபிஎஸ் கொடுத்த அடுத்தடுத்த அதிர்ச்சி சம்பவங்கள், ஒற்றைத் தலைமை, பொதுச்செயலாளர் பொறுப்புகளுக்கு முடிவுரை எழுதும் வகையில் ஓபிஎஸ் டெல்லி பயணித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, அதிமுகவை இபிஎஸ் வசம் இருந்து தனது பக்கம் அல்லது இரட்டை தலைமையையே அழுத்தமான அதிகார அமைப்பாக மாற்றுவது எப்படி என்ற வியூகத்திற்காக ஓபிஎஸ் பயணித்துள்ளார். இதற்கிடையே, அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் நடந்த கலவரங்கள், ஓபிஎஸ் அவமதிக்கப்பட்டது, இபிஎஸ்-இன் எழுச்சி ஆகியவற்றை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்த சசிகலா தனது அரசியல் சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்த மூன்று பயணங்களை விரிவாக ஆராய வேண்டியுள்ளது.

இபிஎஸ்-இன் பொதுச்செயலாளர் பயணம்:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு நடைபெறும் என அதே பொதுக்குழுவில் நிரந்தர அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் மகன் உசேன் அறிவித்தார். இதனையடுத்து, பாதியிலேயே வெளியேறினார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக பொதுக்குழுக் கூட்டம் முடிவடைந்த சில மணி நேரங்களிலேயே பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களான கே.பி. முனுசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் இபிஎஸ் தீவிர ஆலோசனை நடத்தினார். அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆவதற்கான ஆழமான சட்ட நுணுக்கங்களையும், அரசியல் நிலைப்பாடுகளையும் இபிஎஸ் ஆராயத் தொடங்கியுள்ளார். இந்த ஆலோசனையின் வெளிப்பாட்டைத் தான் சி.வி. சண்முகம் வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, நேற்று வரை ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட்டு முறைப்படி பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். ஆனால், அவர்கள் இருவருடைய இரட்டைப் பதவி நியமனமும் தற்போது செல்லாது என்றும், ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு ஒருங்கிணைப்பாளர் அனுமதி தேவையில்லை என்றும் வெளிப்படையாக அறிவித்துள்ளார். அதாவது, ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கொடுத்தால் பொதுக்குழுவைக் கூட்டலாம். நேற்றோடு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதால், இன்று முதல் ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர், எடப்பாடி பழனிசாமி தலைமை நிலையச் செயலாளர் மட்டுமே என்று அதிமுகவின் சட்ட விதிகளைச் சுட்டிக்காட்டி சி.வி. சண்முகம் விளக்கம் அளித்தார். இதன் மூலம், அதிமுகவில் ஓபிஎஸ் உடைய அதிகார பலம் குறைக்கப்பட்டுவிட்டது அல்லது அவரை முதன்மைப்படுத்தும் சூழல் இனி இருக்காது என்பது வெளிப்பட்டுவிட்டது. கடந்த 14 ஆம் தேதி முதலே அதிமுகவில் ஒற்றைத் தலைமை முழக்கம் ஓங்கி ஒலிக்கிறது. இருப்பினும், ஓபிஎஸ்-ஐ ஓரங்கட்டுவது பற்றி அதிகாரப்பூர்வமாக யாரும் பேசவில்லை. செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் சி.வி. சண்முகம், கே.பி. முனுசாமி பேச்சும், அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வெளிப்படுத்திய கருத்துக்களும் ஓபிஎஸ்-யை அதிகார இறக்கம் செய்வதற்கான அனைத்துப் பணிகளையும் இபிஎஸ் ஆதரவாளர்கள் வெளிப்படையாக செயல்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

இந்த இடத்தில், ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்திற்கும் அதிமுக எம்.பி. சி.வி. சண்முகம் பதில் அளித்துள்ளார். உட்கட்சியில் குழுக்களுக்கிடையே உள்ள பிரச்னையில் நீதிமன்றம் தலையிட அதிகாரம் இல்லை எனவும், பொதுக்குழு விதிகளின்படி நடைபெற்றுள்ளது. அவைத்தலைவர் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று காட்டமாக கூறிய சி.வி. சண்முகம், நீதிமன்ற உத்தரவை நாங்கள் மீறவில்லை; ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு பொதுக்குழுவில் அங்கீகரிக்கப்படவில்லை. கட்சி விதிகளை மாற்றவும் திருத்தவும் பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என கூறினார். அதே நேரத்தில், பொது மன்னிப்பு வழங்கி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். இரட்டை இலை சின்னத்தை முடக்கியவர், அதிமுகவை அழிக்க நினைத்தவர் அவர் என்று குற்றச்சாட்டுக்களையும் சி.வி. சண்முகம் அடுக்கினார். இதன் மூலம், இபிஎஸ் தனது பொதுச்செயலாளர் பயணத்திற்கான தீவிரத்தை அதிகப்படுத்தியுள்ளார்.

ஓபிஎஸ் டெல்லி பயணம் :

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகள் காலாவதியாகிவிட்டதாக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியது தனித்து கவனிக்கப்படக் கூடியதாக பார்க்கப்படுகிறது. அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டங்களில் ஓபிஎஸ் அவமதிக்கப்பட்டது. அவர் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. பொதுக்குழு மேடையில் ஓபிஎஸ்-ஐ அமர வைத்துக்கொண்டே அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியது என இபிஎஸ் ஆதரவாளர்கள் செய்த செயல்களை தமிழ்நாடே பார்த்துக்கொண்டு இருந்தது. இந்த அரசியல் அனர்த்தங்களுக்கு மத்தியில் தான் ஓபிஎஸ் உடைய டெல்லி பயணத்தை பார்க்க வேண்டியுள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இபிஎஸ்-க்கு செக் வைக்கலாம் என்று இருந்தார் ஓபிஎஸ். ஆனால், ஓபிஎஸ் இனி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் இல்லை, அவர் பொருளாளர் மட்டுமே என அஸ்திரத்தை பாய்ச்சியுள்ளார்கள் இபிஎஸ் ஆதரவாளர்கள்.

இதனால், ஓபிஎஸ் இடம் எஞ்சி இருக்கும் அஸ்திரங்களை ஆராய உள்ளது. ஓபிஎஸ் உடைய டெல்லி பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த ஓபிஎஸ் நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அதிமுக பொதுக்குழுவில் நடைபெற்ற விவகாரங்களை முறையிட்டு தனக்கு உதவி கேட்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம், தற்போது இருக்கும் இரட்டை தலைமை தொடருவதற்கான உதவிகளைக் கோர வாய்ப்பு உள்ளது. இதனால், ஓபிஎஸ் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இதே போல், 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பிருந்தே சசிகலாவை அதிமுகவில் இணைப்பது தொடர்பாக சசிகலாவிற்கு சாதகமான கருத்துக்களை ஓபிஎஸ் வெளிப்படுத்தி வந்தார். அதிமுகவில் தற்போது தனக்கான முக்கியத்துவம் குறைந்து வருவதை உணர்ந்து, அவர், சசிகலா, டிடிவி தினகரனை சந்தித்து அதிமுகவை கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் இறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

சசிகலாவின் புரட்சி பயணம்:

கடந்த சில மாதங்களாகவே ஆன்மீக சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் சசிகலா. அதிமுக பொதுக்குழு செயற்குழு அறிவிக்கப்பட்ட போதிலும், அதற்கு பிறகு அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை வலுப்பெற்ற போதிலும், அதிமுக பொதுக்குழுவில் நடந்த சம்பவங்களைப் பார்த்த பிறகும் கூட மௌனம் கலைக்காமல் இருந்த சசிகலா, தற்போது தனது பலத்தை அதிகப்படுத்தும் நோக்கில் அரசியல் சுற்றுப் பயணத்தை அறிவித்துள்ளார். வரும் 26 ஆம் தேதி தொடங்கும் இந்த பயணத்தில், தமிழ் மண்ணின் உரிமைகளை காத்திடவும், பெண்ணினத்தின் பெருமைகளைப் பேணி காத்திடும் வகையிலும் புரட்சிப்பயணத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளார். அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்ற இபிஎஸ் பயணம், ஓபிஎஸ் டெல்லி பயணம் என அதிமுக வட்டாரம் சூடு பிடித்துள்ள நிலையில் சசிகலாவின் அரசியல் பயணமும் தனி கவனம் பெற்றுள்ளது. அடிப்படையில், இபிஎஸ் – ஓபிஎஸ் இருவரும் சட்டப்படியும், தேர்தல் ஆணையத்தின் மூலமாகவும் தங்களின் அதிகாரத்தை தக்க வைக்க போட்டி போடுகின்றனர். ஆனால், சசிகலாவோ அதிமுக தொண்டர்களை நேரடியாக சந்தித்து தனது பலத்தை கூட்ட தீர்மானித்துள்ளது தனித்து கவனிக்க வேண்டியது. 2021 தேர்தலில் கிடைத்த எம்.எல்.ஏக்கள் இடங்களைப் பொறுத்து இபிஎஸ் – ஓபிஎஸ் தங்களின் வாக்கு வங்கியை நிரூபித்துவிட்டனர். ஆனால், தொண்டர்களின் பலத்தை சசிகலா இதுவரை காட்டாமல் இருந்தார். தற்போது, தொண்டர்களின் பலத்தைக் கூட்டவும், அதிமுகவை மீட்கவும் அவர் மேற்கொண்டிருக்கும் இந்த அரசியல் பயணத்தில் அவர் என்ன வியூகத்தை கையில் எடுக்கப் போகிறார் என்பதும் பொறுத்திருந்து பார்க்க வேண்டி இருக்கிறது.

சசிகலாவின் பயண திட்டம், திருத்தணி, குண்டலூர் ஆகிய பகுதிகளில் இருந்து தொடங்குவதால், வடக்கு தமிழ்நாட்டில் அவர் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருவள்ளூர் உள்ளிட்ட வடக்கு மற்றும் மேற்கு தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் இபிஎஸ் கை ஓங்கி இருக்கிறது. இந்த பின்னணியில், சசிகலா வடக்கு மற்றும் மேற்கு தமிழ்நாட்டில் இருந்து தனது பயணத்தை தொடங்குவது என்பது நேரடியாகவே இபிஎஸ் உடன் அரசியல் யுத்தத்திற்கு தயாராகிறாரா என்ற கேள்வியையும் எழுப்பி இருப்பதை பார்க்க வேண்டியுள்ளது. ஆக மொத்தத்தில், இபிஎஸ் – ஓபிஎஸ் – சசிகலா ஆகிய மூவரின் இந்த அதிகார அரசியல் பயணம் சட்ட ரீதியாகவும் தொண்டர்கள் செல்வாக்கை பெருக்குவதிலும் சரி, அதிமுகவைக் கைப்பற்றுவதிலும் சரி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதில், யார் கை ஓங்கப்போகிறது என்பது காலத்தின் கைகளில் தான் இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் ஐடி பார்க்

Saravana Kumar

மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்: வெள்ள அபாய எச்சரிக்கை

Halley Karthik

பூஸ்டர் டோஸ் கட்டாயமில்லை: மாநில தேர்தல் ஆணையம்

Saravana Kumar