ஆண்டுக்கு 3 சிலிண்டர் வழங்கப்படும் – முதலமைச்சர் விஜய்!

ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் உள்ளிட்ட 3 முக்கிய அறிவிப்புகளை என்று முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொது மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று கூட்டத்தொடர் மீண்டும் தொடங்கியது. இன்றைய கூட்டத்தொடரில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரம் ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. இதனிடையே சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்றைய கூட்டதொடர் தொடங்கியவுடன் தவெக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதுகுறித்து முதலமைச்சர் விஜய் பேசியதாவது, “

கேஸ் சிலிண்டர்

போர் சூழல் காரணமாக சிலிண்டர் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை முதல் அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் செயல்படுத்தப்படும். சிலிண்டர் வழங்கும் திட்டம் பொங்கல் பண்டிகை முதல் செயல்பாட்டுக்கு வரும். அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும். வரும் பொங்கல் பண்டிகை முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும். இதற்காக ஆண்டுக்கு 4,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். எரிவாயு சிலிண்டருக்கான விலை நேரடியாக பயனாளியின் கணக்கில் வரவு வைக்கப்படும். ஆண்டுக்கு 2.50 லட்சம் வரை வருமானம் பெறுவோரின் குடும்பத்தினருக்கு சிலிண்டருக்கு நிதி வழங்கப்படும்.

பரந்தூர் விமான நிலையம்

பரந்தூர் விமான நிலையம் அமைக்க கூடாது என போராடிய மக்களுடன் உறுதியாக நிற்கிறேன். நீண்ட நாட்களுக்கு மேலாக இந்த திட்டத்திற்கு எதிராக போராடிவரும் விவசாயிகளுக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். விக்கிரவாண்டியில் அக்டோபர் 2024 நடந்த பொதுக் கூட்டத்திலேயே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறேன். தொழில் வளர்ச்சி மற்றும் அதற்கான விமான நிலையங்களின் பங்கு பற்றி நான் நன்கு அறிவேன். அதற்கான என்னுடைய முழு ஆதரவும் உண்டு. ஆனால் பரந்தூரில் இந்த திட்டம் அமையக்கூடாது. இந்த திட்டம் குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும், குறைவான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் வகையிலும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும் மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்தேன். மக்கள் மத்தியிலே நான் அன்று அறிவித்ததை நிறைவேற்றும் பொருட்டு புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து உயர் அதிகாரிகளிடமும், துறை வல்லுனர்களிடமும் விரிவாக ஆலோசனை நடத்தினேன். ஏற்கனவே நான் உறுதி அளித்தவாறு பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்த அரசால் கைவிடப்படும். புதிய விமான நிலையம் அமைப்பதற்கு புதிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

வெற்றிப் பயணத் திட்டம்

மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டம் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் காந்தியடிகள் பிறந்த அக்டோபர் 2-ஆம் தேதி முதல் விரிவாக்கம் செய்யப்படும். முதற்கட்டமாக மாநகரம், நகரப் பகுதிகளில் இயங்கும் Express, LSS, Deluxe அரசுப் பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப் பகுதிகளில், சாதாரணக் கட்டண பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். வருமான உச்சவரம்போ மற்றும் மேற்கொள்ளவிரும்பும் பயண எண்ணிக்கையிலோ கட்டுப்பாடுகள் இல்லை. திருநரும் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம்.” இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.