அச்சுறுத்தும் கொரோனா… ஒரே நாளில் 4 பேர் உயிரிழப்பு… இந்தியாவில் எத்தனை பேருக்கு பாதிப்பு?

இந்தியாவில் கொரோனா தொற்றால் நேற்று ஒரேநாளில் 4 பேர் உயிரிழந்தனர்.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல உயிர்களை பறித்துச் சென்றது. ஊரடங்கு, தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பரவல் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே, சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. கொரோனா தொற்று தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 7,000க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 5608 ஆக உள்ளது. இருப்பினும், கொரோனா தொற்றால் நேற்று ஒரேநாளில் இந்தியாவில் 4 பேர் உயிரிழந்தனர். டெல்லி ,கேரளா, மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களிலும் தலா ஒருவர் உயிரிழந்தனர்.

டெல்லியில் 75 வயது ஆணும்,கேரளாவில் 76 வயது பெண்ணும், மகாராஷ்டிராவில் 66 வயது பெண்ணும், பஞ்சாபில் 82 வயது ஆணும் இணை நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கோவிட் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தனர். கொரோனா தொற்று பாதிப்பு குறைந்திருந்தாலும் தொடர் உயிரிழப்பு சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.