கொரோனா தொற்று காரணமாக வீட்டு தனிமையில் இருப்பவர்கள் வெளியே வந்தால், 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை முனைப்புடன் எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொரோனா தொற்று பாதித்து வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுக்கு உதவுவதற்காக, சென்னை மாநகராட்சியால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்களப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கொரோனா பாதித்தவர்களோ, அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
எனினும், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் சிலர் மற்றும் அவர்களது குடும்பத்தார் வீட்டைவிட்டு வெளியே வருவது குறித்து புகார்கள் பெறப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள ககன்தீப் சிங் பேடி, வெளியே வருபவர்களிடம் இனி 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
இரண்டாவது முறையும் வெளியே வருவது கண்டறியப்பட்டால், அவர்கள் கொரோனா பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு வெளியே வருபவர்கள் குறித்து அருகில் வசிப்பவர்கள் 044-25384520 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றும் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.