இருபது ஓவர் உலகக் கோப்பைத் தொடரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஷ் தொடரும்தான் தனது இலக்கு என்று, அறுவைச் செய்துகொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர். இவர் தென்னாப் பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விளையாடிய போது, வலது முழங்கையில் காயமடைந்தார். அதன்பின் தொடர்ந்து அந்த காயத்தால் அவர் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில், முழங்கையில் ஏற்பட்ட காயத்திற்கு கடந்த வாரம் (21 ஆம் தேதி) அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இன்னும் 4 வாரங்களில் அவரது காயம் குறித்து ஆராய்ந்து, அவர் எப்போது விளையாடுவதற்குத் தயாராவார் என்பது பற்றி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்யும். இதனால், இங்கிலாந்து அணி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பங்கேற்கும் போட்டிகளில் ஆர்ச்சர் கலந்துகொள்ள வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில், அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட ஆர்ச்சர் கூறும்போது, ‘இந்தியாவுக்கு எதிரான தொடருக்குள் தயாராகி விடுவேன். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் நடக்கும் அந்த தொடரில் விளையாட முடியவில்லை என்றாலும் டி20 உலகக் கோப்பை தொடரும் ஆஷஷ் தொடரும்தான் என் இலக்கு. அதனால் நான் அவசரப் படவில்லை. அதற்குள் என் உடல்நிலை தயாராகி, இந்தியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்க முடிந்தால் நல்லது. இங்கிலாந்துக்காக மூன்று வடிவங்களிலான போட்டிகளிலும் விளையாடுவதற்கும் பெரிய தொடர்களை வெல்வதற்கும் ஆர்வமாக இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.







