பழங்குடியினர் மீதான வெறுப்பின் முகம் இதுதான் என பழங்குடியின இளைஞர் மீது பாஜக பிரமுகர் சிறுநீர் கழித்த சம்பவத்தை சுட்டிக்காட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் ஒருவர் அமர்ந்த நிலையில் இருக்க அவர்மீது பிரவேஷ் சுக்லா என்ற நபர் சிறுநீர் கழித்த சம்பவம் குறித்த விடியோ ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்த வீடியோவை கண்டித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சித்த நிலையில் மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் கவனத்துக்கும் சென்றுள்ளது. தொடர்ந்து முதலமைச்சர் உத்தரவுக்கு பின் சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லா மீது இந்திய தண்டனை சட்டத்தின் 294, 504 ஆகிய பிரிவுகள், வன்கொடுமை தடுப்புச் சட்டம், தேசியப் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட பிரவேஷ் சுக்லா ஆளும் பாஜகவைச் சேர்ந்தவர் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்த சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
भाजपा राज में आदिवासी भाइयों और बहनों पर अत्याचार बढ़ते ही जा रहे हैं।
मध्यप्रदेश में एक भाजपा नेता के अमानवीय अपराध से सारी इंसानियत शर्मसार हुई है।
यह भाजपा का आदिवासियों और दलितों के प्रति नफ़रत का घिनौना चेहरा और असली चरित्र है!
— Rahul Gandhi (@RahulGandhi) July 5, 2023
இந்த பதிவில் ராகுல் காந்தி, “பாஜக ஆட்சியில் பழங்குடியின சகோதர சகோதரிகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. மத்தியப்பிரதேசத்தில் பாஜக தலைவர் ஒருவரின் மனிதாபிமானமற்ற குற்றத்தால் ஒட்டுமொத்த மனித குலமே அவமானமடைந்துள்ளது. பழங்குடியினர் மற்றும் தலித்துகள் மீதான பாஜகவின் வெறுப்பின் கேவலமான முகமும் உண்மையான குணமும் இதுதான்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.







