திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. இதனையடுத்து இன்று மகா தீபம் ஏற்றப்படுகிறது. அதன் முன்னோட்டமாக இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.
அருணாச்சலேஸ்வரர் கருவறையில் ஏற்றப்பட்ட பரணி தீபம், அர்த்த மண்டபத்தில் 5 தீபங்களாக காட்டப்படுகிறது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவை ஏகன், அனேகன் என்பதை குறிக்கும் வகையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இந்த தீபம் கார்த்திகை மாதத்தின் பரணி நட்சத்திரத்தில் ஏற்றப்படுவதால், பரணி தீபம் என்று அழைக்கப்படுகிறது. அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டுள்ள நிலையில் மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
மகா தீபத்திற்கு தேவையான 3,500 லிட்டர் நெய், காடா திரி ஆகியவை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக தீபத்திருவிழாவை முன்னிட்டு அருணாச்சலேஸ்வரர் – உண்ணாமுலையம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்யவும், மலை மீது ஏறவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிரிவலம் செல்வதற்கு மட்டும் இன்றும், நாளையும் உள்ளூர் பக்தர்கள் 5,000 பேரும் வெளியூர் பக்தர்கள் 15,000 பேரும் நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக திருவண்ணாமலை நகர் முழுவதும் 5,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.








