“நாள்தோறும் நவில்ஓம் திருமந்திரம்” என்ற தொடரின் கீழ், இன்று ஒரு புதிய செய்யுளைக் காண்போம்…
சிவனொடு ஒக்குந் தெய்வம் தேடினும் இல்லை
அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
துவனச் சடைமுடித் தாமரையானே. (கடவுள் வாழ்த்து. 4)

தெளிவுரை : சிவனுக்கு ஒப்பாகக் கூறும் தெய்வம் எங்கு தேடினாலும் காண இயலாது. திருமாலும், நான்முகன் பிரம்மாவும் அடிமுடி தேடிய உண்மை அனைவரும் அறிந்ததே. ஒரு பொருளின் ஒரு பகுதி, அந்தப் பொருளை விட பெரியதாக முடியாது. அது போல், தெய்வங்கள் என்று வணங்கும் அனைவரும் சிவனுக்குள் அடக்கம். எனவே சிவனுக்கு இணையான தெய்வம் எங்குமே இல்லை.தேவருள்ளும் சிவனை நிகிர்ப்பவர் எவரும் இல்லை. மாந்தருள்ளும் அவனோடு ஒப்பாவார் ஒருவரும் இல்லை. இயல்பாகவே உலகைக் கடந்து நின்று உணர்வுக் கதிரவனாய் அறிவுச் சுடராய், (ஞான சூரியனாய்) விளங்குகின்ற முழு முதற் கடவுள் சிவபெருமானே.
இறைவன் இவ்வுலகிற்கு எல்லாம் அப்பாற்பட்ட அண்ட வெளியில் நிறைந்திருக்கும் பேரொளியாய் விளங்குகிறான். பொன் போல் ஒளிர்கின்ற செந்நிறச் சடைமுடியான், தாவுகின்ற மானைத் (தா-மரை) தன் திருக்கரத்தில் ஏந்திய சிவபெருமான் என்றவாறு. வெண்மை பொருந்திய தாமரை போன்ற சடைமுடி உடையவனே.இதன் மறைபொருள் யாதெனின், சஹஸ்ரார சக்கரமானது வெண்மையான ஒளி பொருந்திய ஆயிரம் இதழ் கொண்ட தாமரையைப் போன்றது. இறைவன் இச்சக்கரத்தில் குடி கொண்டுள்ளான்.
-தங்கம்







