தமிழ்நாட்டின் கடன் சுமை திமுக அரசுக்கு மிகப்பெரிய சவாலாகும் என மக்களவை உறுப்பினர் திருமாவளவன் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு நிதிநிலை குறித்து இன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடன் சுமை அதிகம் உள்ளது மிகவும் கவலைக்குரியது என்றும், இது திமுக அரசுக்கு மிகப்பெரிய சவாலாகும்
என்றும் தெரிவித்தார். மேலும் அதிமுக ஆட்சியில் நிதிமேலாண்மை சரியாக கையாளப்படவில்லை என்றும், இதன் காரணமாக அதிகமாக வட்டி கட்டும் நிலை உருவாகியுள்ளது, வருவாய், வளர்ச்சி திட்டம் கைவிடப்படப்பட்டு உள்ளது என்றும் திருமாவளன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 30 ஆயிரம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை வழங்கப்படாமல் உள்ளது எனவும் கூறிய அவர், மத்திய அரசிடம் அப்போதைய அதிமுக அரசு கூடுதல் நிதியை கேட்டுப்பெறவில்லை என்றும் விமர்சனம் செய்தார்.
திமுக அரசு நல்ல பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என நம்புவதாக கூறிய திருமாவளவன், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மனிதவள மேம்பாட்டை நம்பி புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்வும் கோரிக்கை வைத்தார். மேலும் கடந்த காலத்தில் ஆட்சி செயல்படாமல் முடங்கி போனதால் வரிச்சுமையை ஏழை, பாமர மக்கள் மேல் சுமத்திவிடக்கூடாது என்றும் நிதிச்சுமையை காரணம் காட்டி மக்கள் நல திட்டங்களையும், தேர்தல் வாக்குறுதிகளையும் தி.மு.க அரசு நிறுத்ததாது என நம்புவதாகவும் திருமாவளவன் கூறினார்.








