புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல மலையாள நடிகை சரண்யா சசி (வயது 35) இன்று சிகிச்சை பலன் இன்றி காலமானார்.
மலையாள தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சில திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சரண்யா சசி. இவர் 2006ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை மலையாள ரசிகர்களிடம் பிரபலமானார். ஆனால் எதிர்பாராதவிதமாக 2012ம் ஆண்டி மூளையில் கட்டியால் பாதிக்கப்பட்டார். இதனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் புற்றுநோய் கட்டி என்பதை உறுதி செய்தனர். இதனால் அவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவருக்கு 11 முறை அறுவை சிகிச்சை செய்ப்பட்டது. இதில் 9 முறை மூளையில் உள்ள கட்டியை நீக்குவதற்காகவும் 2 முறை தைராய்டு பிரச்சினைக்காகவும் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். புற்றுநோயில் இருந்து குணமடைந்த சரண்யா சசி தனியாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் சரண்யா சசி. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கொடுத்தனர். இதனால் ஜூன் மாத இறுதியில் கொரோனாவிலிருந்து மீண்டார். ஆனாலும் அவருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டதால் தொடர் சிகிச்சையில் கண்காணிக்கப்பட்டு வந்தார். மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தபோதே அவர் வருமானத்திற்கு வழியின்றி, பலருடைய நிதியுதவியின் மூலம் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று மருத்துவமனையில் சரண்யா சசி உயிரிழந்தார்.
மலையாள சீரியல் இயக்குநர் பாலசந்திர மேனன் என்பவரின் சீரியலில் 2006ம் ஆண்டு அறிமுகமான சரண்யா சசி, மோகன் லால் நடித்த சோட்டா மும்பை, தலப்பாவு, பாம்பே மார்ச் 12, ஆன் மரியா கலிப்பிலானு ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.








