இந்தியாவின் தலைசிறந்த பின்னணி பாடகியான எஸ். ஜானகி(88), வயது மூப்பு காரணமாக நேற்று மைசூருவில் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவன் எஸ்.ஜானகி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “திரையுலகின் பேராளுமைகளுள் ஒருவரான பின்னணி பாடகர் ஜானகி அம்மாளின் மறைவு மிகுந்ததுயரமளிக்கிறது. வயது மூப்பின் விளைவு தான் என்றாலும் அவர் இன்று நம்மிடையே இல்லை என்பது வெறுமை உணர்வைத் தருகிறது.
இசை உலகில் அவரது சாதனை எண்ணும்தோறும் பெருவியப்பை உருவாக்குகிறது. 48000 பாடல்கள், இருபது மொழிகளில் பாடியுள்ளார் என்பதும்; நான்கு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார் என்பதும் பெருமை அளிக்கிறது.
அவரது குரல் நம் ஒவ்வொருவரின் செவிக்கும் பேரானந்தம் வழங்கிய சிறப்புக்குரியதாகும். அவரது மறைவு திரையுலகுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த நம் யாவருக்கும் நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் யாவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




