தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அனுமதி வழங்காததால், புகழ்பெற்ற திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயில் மீண்டும் திறக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட, திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அழகுற அமைந்துள்ளது திருமலைநம்பி கோயில். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் இந்த கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு பெற்றது. இப்பகுதி பக்தர்களால் ஏழைகளின் திருப்பதி என்று அழைக்கப்படும் திருமலைநம்பி கோயில், திருக்குறுங்குடியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. வனத்துறை சோதனைச்சாவடியில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல சாலை வசதி இல்லாததால், 4 கி.மீ. தூரம் பக்தர்கள் நடந்தே செல்கின்றனர்.
பிரசித்தி பெற்ற இந்த கோயிலில், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், 2-ம் கட்ட கொரோனா பரவல் காரணமாக, கடந்த மே மாதம் தமிழ்நாட்டில் கோயில்கள் மூடப்பட்டன. அதுபோல திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலும் மூடப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது.
தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, கடந்த 5-ம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயில் மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை. இக்கோயில் களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளதால், கோயிலை திறக்க, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அனுமதி வழங்க வேண்டும், என்று வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால், அவ்வாறு இதுவரை அனுமதி வழங்காததால், கோயிலை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், நம்பி கோயிலுக்கு நேர்ச்சை கடன்களை செலுத்த முடியாமலும் தவித்து வருகின்றனர்.
எனவே, திருமலைநம்பி கோயிலை திறக்க தேசிய புலிகள் ஆணையத்தின் அனுமதியை பெற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கொரோனா விதிமுறைகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
– ஸ்ரீமுருகன்.
Advertisement: