ஒடியா மொழியில் திருக்குறள் புத்தகத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முதுமலை சரணாலயத்தில் உள்ள தெப்பகாடு யானைகள் முகாமை பார்வையிட்டு யானை பராமரிப்பாளர்களான பொம்மன் பெள்ளி ஆகியோரை சந்திப்பதற்காக ஹெலிகாப்டரில் மூலம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நீலகிரி வந்திறங்கினார். இதனைத் தொடர்ந்து யானைகள் முகாமை ஒரு மணி நேரம் பார்வையிட்டார்.
இதன் பிறகு ஆஸ்கர் விருது பெற்ற தீ எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகளுக்கு கரும்பு, பழம் உள்ளிட்ட உணவுகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து தெப்பக்காடு யானைகள் முகாம் மற்றும் கோவை மாவட்டம் டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் உள்ள பாகன்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனை முடித்துக் கொண்டு தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் இருந்து 6 கிலோமீட்டர் வனப்பகுதி சாலை மார்க்கமாக மசினகுடி பகுதியில் உள்ள ஹெலிகாப்டர் தளத்திற்கு வந்தடைந்தார். இதன் பிறகு ஹெலிகாப்டர் மூலம் மைசூர் சென்ற அவர் மைசூரில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.
இந்த நிலையில் சென்னை வந்தடைந்த குடியரசுத் தலைவரை திரௌபதி முர்முவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் வரவேற்றார். இவருடன் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பொன்முடி ஆகியோர் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு ஒடியா மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குறளை வழங்கினார்.




