”அவதூறு பரப்புவதற்கு முன் யோசித்து பேசுங்கள்…” – ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கொடுத்த அதிரடி பதில்!

மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி குளறுபடியில் சிலர் மலிவான அரசியல் செய்து வருவதாக ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா குற்றம்சாட்டியுள்ளார்.  சென்னை, கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ”மறக்குமா நெஞ்சம்” நிகழ்ச்சி கடந்த…

மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி குளறுபடியில் சிலர் மலிவான அரசியல் செய்து வருவதாக ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா குற்றம்சாட்டியுள்ளார். 

சென்னை, கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ”மறக்குமா நெஞ்சம்” நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் அன்று மழை பெய்ததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, நேற்று முன்தினம் அதே இடத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக 6 ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளியில் ஏராளமான இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. 1000 ரூபாயில் தொடங்கி 50 ஆயிரம் ரூபாய் வரை மற்றும் நின்று கொண்டே பார்ப்பதற்கு பல பிரிவுகளில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இசை நிகழ்ச்சியில் பங்கேற்க காலையில் இருந்து ரசிகர்கள் பனையூர் நோக்கி வரத் தொடங்கியதால், கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் காரணமாக, இசை நிகழ்ச்சியில் பங்கேற்க டிக்கெட் பெற்றவர்கள் சரியான நேரத்தில் உரிய இடத்தை போய் சேர முடியவில்லை. இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிய ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு இருக்கை ஒதுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.மேலும், கிழக்கு கடற்கரைச் சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் சென்னை மக்கள் திணறியது இணையத்தில் கடந்த இரண்டு நாள்களாக பேசு பொருளாகியுள்ளது. இந்த சம்பவத்துக்கு இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ‘ஏசிடிசி ஈவண்ட்ஸ்’ மன்னிப்பு கேட்டதுடன், நிகழ்ச்சியில் பங்கேற்காதவர்கள் டிக்கெட் நகலை பதிவிடுங்கள் என்று ஏ.ஆர்.ரஹ்மானும் தெரிவித்திருந்தார். இதற்கிடையே பல்வேறு தரப்பினர் ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

நடந்த சம்பவங்களுக்கு முழு பொறுப்பு ஏற்பதாகவும், மன்னிப்பு கோருவதாகவும்  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.

இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடியில் சிலர் மலிவான அரசியல் செய்து வருவதாக அவரது மகள் கதீஜா ரகுமான் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இசை நிகழ்ச்சி மூலம் ஏ.ஆர்.ரகுமான் ஊழல் செய்ததை போல சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். சிலர் இந்த விவகாரத்தில் மலிவான அரசியல் செய்து வருகின்றனர். நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் அனைத்திற்கும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தான் 100% காரணம். ஆயினும் ஏ.ஆர்.ரகுமான் அதற்காக முழு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளார்.

https://twitter.com/RahmanKhatija/status/1701220781165039950

ஏ.ஆர்.ரகுமான், 2015-ம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில், 2016-ம் ஆண்டு சென்னை மதுரை கோவை மாவட்டங்களில் நெஞ்சே எழு என்ற இசை நிகழ்ச்சி நடத்தினார்.

கேரள மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது 2018-ம் ஆண்டு வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் உதவினார்.

2020-ம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு உதவினார்.

2022-ம் ஆண்டு திரைத்துறையில் ஏழ்மை நிலையில் உள்ள லைட் மேன்களுக்கு உதவும் நோக்கில் இலவசமாக இசை நிகழ்ச்சி நடத்தினார். அவர் குறித்து அவதூறாக பேசும் முன் இதனையெல்லாம் யோசித்து பேசுங்கள்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.