ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக எழுந்த சர்ச்சையில், அவருடன் துணை நிற்பதாக திரைப்பட கலைஞர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ”மறக்குமா நெஞ்சம்” நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் அன்று மழை பெய்ததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, நேற்று முன்தினம் அதே இடத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக 6 ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளியில் ஏராளமான இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. 1000 ரூபாயில் தொடங்கி 50 ஆயிரம் ரூபாய் வரை மற்றும் நின்று கொண்டே பார்ப்பதற்கு பல பிரிவுகளில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இசை நிகழ்ச்சியில் பங்கேற்க காலையில் இருந்து ரசிகர்கள் பனையூர் நோக்கி வரத்
தொடங்கியதால், கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் காரணமாக, இசை நிகழ்ச்சியில் பங்கேற்க டிக்கெட் பெற்றவர்கள் சரியான நேரத்தில் உரிய இடத்தை போய் சேர முடியவில்லை. இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிய ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு இருக்கை ஒதுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.
மேலும், கிழக்கு கடற்கரைச் சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் சென்னை மக்கள் திணறியது இணையத்தில் கடந்த இரண்டு நாள்களாக பேசு பொருளாகியுள்ளது. இந்த சம்பவத்துக்கு இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ‘ஏசிடிசி ஈவண்ட்ஸ்’ மன்னிப்பு கேட்டதுடன், நிகழ்ச்சியில் பங்கேற்காதவர்கள் டிக்கெட் நகலை பதிவிடுங்கள் என்று ஏ.ஆர்.ரஹ்மானும் தெரிவித்திருந்தார். இதற்கிடையே பல்வேறு தரப்பினர் ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்து இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடியில் இருந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். ரசிகர்களின் பாதுகாப்பை ஏற்பாட்டாளர்கள் கவனித்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் மேடையில் நாங்கள் உள்ளோம்.
https://twitter.com/thisisysr/status/1701297362755526955?s=20
திட்டமிடல், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றில் அனைத்து கலைஞர்களும் பங்காற்றுவது அவசியம் என்பது இதிலிருந்து தெரிகிறது. சக இசை கலைஞராக ஏ.ஆர்.ரஹ்மானுடன் துணை நிற்கிறேன். இந்த சம்பவத்தில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு வரும் காலங்களில் மேம்படுத்தப்படும் என்று நம்புகிறேன். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான வசதிகளை உறுதி செய்ய வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தளத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதில், “ஏ.ஆர்.ரஹ்மானை 3 தசாப்தங்களுக்கும் மேலாக அறிந்திருக்கிறோம். அத்துடன் நேசிக்கிறோம். கச்சேரியின் போது நடந்தது துரதிர்ஷ்டவசமானது. அவர் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார். குழப்பங்களுக்கு மத்தியில் எனது குடும்பத்தினரும் கச்சேரியில் இருந்தனர்.
https://twitter.com/karthi_offl/status/1701459989821616316?s=48
ஆனால் நான் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு துணையாக இருக்கிறேன். நிகழ்ச்சியின் குழப்பங்களுக்கு ஏற்பாட்டாளர்கள் பொறுப்பேற்பார்கள் என்று நம்புகிறேன். ரஹ்மான் சார் எப்போதும் தனது அன்பை அனைவருக்கும் கொடுப்பதால் வெறுப்பை விட அன்பை தேர்வு செய்யுமாறு அனைத்து ரசிகர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
மேலும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு, தனது எக்ஸ் தளத்தில், ”இசை நிகழ்ச்சியில் ரஹ்மானின் ரசிகர்கள் எதிர்கொண்ட பெரும் குழப்பம் மற்றும் சிரமங்களைப் பற்றி கேள்விப்பட்டேன். ரஹ்மான் எப்போதும் தனது ரசிகர்கள் ஏமாற்றமடையாமல் பார்த்துக் கொள்பவர். உயர்மதிப்பு டிக்கெட் இருந்தும் அனுமதி மறுக்கப்பட்டவர்களில் எனது மகளும் அவளுடைய நண்பர்களும் அடங்குவர்.
https://twitter.com/khushsundar/status/1701465614932672607?s=46
அவர்கள் அந்த இடத்தை அடைய 3 மணி நேரத்திற்கு மேல் ஆனது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆனால் மக்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்னைக்கும் ரஹ்மான் பொறுப்பேற்க முடியாது. ரஹ்மான் நேரலை நிகழ்ச்சிக்காக நிரம்பி வழியும் கூட்டத்தை பற்றி உணராத நிர்வாகத்தின் முழுமையான தவறு இது. ரஹ்மான் தனது இசை, வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம் எப்போதும் அன்பையும் அமைதியையும் பகிர்ந்து கொண்டுள்ளார். அவருடன் நின்று, எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுவோம்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.







