சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே ஆளவந்தார் அறக்கட்டளைக்கு
சொந்தமான அரசு நிலங்களை மீட்க வந்த அதிகாரிகளிடம், பொதுமக்கள்
வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில் இருந்து கோவளம் வரை
ஈசிஆர் சாலையையொட்டி, ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமாக 1,050
ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலங்கள் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால், அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை, ஏப்ரல் மாதம் 30ம் தேதிக்குள் நிலங்களை மீட்டு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்பேரில், செங்கல்பட்டு மாவட்ட அறநிலையத்துறை உதவி ஆணையர்
லட்சுமிகாந்த பாரதிதாசன் தலைமையில், செயல் அலுவலர் சக்திவேல்
முன்னிலையில், அதிகாரிகள் மாமல்லபுரம் அருகே சாலவான்குப்பம், நெம்மேலி மற்றும் பட்டிப்புலம் கிராமங்களில் உள்ள சுமார் 2.90 ஏக்கர் நிலத்தை மீட்க வந்தனர்.
மேலும், பட்டிப்புலம் மீனவர் கிராமத்தில், கிராம மக்கள் நுழைவாயில் முன்பு
அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
—-கு.பாலமுருகன்







