அவசர சிகிச்சையில் அலட்சியம் இருக்க கூடாது- முதல்வர் ரங்கசாமி

காரைக்காலில் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து சிறுவன் உயிரிழந்ததில் நீதி கேட்டு இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் மௌன பேரணி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி தனியார் பள்ளியில் 8-ம்…

காரைக்காலில் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து சிறுவன் உயிரிழந்ததில் நீதி கேட்டு இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் மௌன பேரணி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த மாணவன் பாலமணிகண்டன், சக மாணவியுடன் கல்வி மற்றும் இதர கலையில் ஏற்பட்ட போட்டி காரணமாக கடந்த 3ம் தேதி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டான். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக சிறுவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது, போலீசாரும், டாக்டர்களும் அலட்சியம் காட்டியதால் தான் மாணவன் உயிரிழந்தான். எனவே காவல்துறை மற்றும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

மாணவனின் பெற்றோரும் அரசு மருத்துவமனை மற்றும் போலீசார் மீது குற்றஞ்சாட்டினர். சிறுவன் பாலமணிகண்டன் சிகிச்சை விஷயத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்யவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் போராளிகள் குழுவினர் காரைக்காலில் முழு கடை அடைப்பு போராட்டம் அறிவித்திருந்தனர்.

இதனையடுத்து மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாணவன் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் காரைக்கால் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை மௌன பேரணி நடைபெற்றது. இதில் உயிரிழந்த மாணவனின் பெற்றோர் உள்ளிட்ட ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இறந்த பால மணிகண்டனுக்கு உரிய நியாயம் கிடைக்க சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்திய மருத்துவ கவுன்சில் மூலம் ஆய்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிம் பேசிய உயிரிழந்த சிறுவனின் பெற்றோர்: சிபிஐ விசாரணை நடந்தால் மட்டுமே தனது மகன் இறப்பு நியாயம் கிடைக்கும் எனவும், புதுச்சேரி அரசு நியமித்த மருத்துவர் குழு அறிக்கை தவறானது எனவும், சிறுவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து தங்களிடம் எந்த தகவலும் பெறாமலே அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார். இந்நிலையில் மருத்துவமனையில் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள் விஜயகுமார் மற்றும் பாலாஜி ஆகியோரை தற்காலிக பணியிடம் நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது, மாணவர் விஷயத்தில் அலட்சியமாக செயல்பட்ட இரண்டு மருத்துவர்கள் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் காலத்தோடு சிகிச்சை அளிக்க வேண்டும். காலதாமதம் இருந்ததாக குறை கூறியதன் காரணமாக 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுளளனர் என்றும் அவசர சிகிச்சையில் அலட்சியம் இருக்க கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.