மின்சார சட்ட திருத்த மசோதா நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய ஊழியர்கள் நாளை போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 18ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு முக்கிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்துவருகிறது. நாளை மின்சார சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மசோதா மின் விநியோக முறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர வகை செய்யும் எனக் கூறப்படும் நிலையில், மின்சாரத்துறையை தனியார் மயமாக்கும் முயற்சி என மின்வாரிய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையிவ் நாடாளுமன்றத்தில் நாளை தாக்கலாகும் மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை போராட்டத்தில் ஈடுபட்டு மின்சார வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அழைப்பு விடுத்திருந்தது.
எனவே நாளை மின்சார சேவை முடங்காமல் இருக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. வேலை நிறுத்தத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மாற்று ஏற்பாடுகளையும் செய்ய அனைத்து மண்டல மின் பொறியாளர்களுக்கும் மின்சார வாரியம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. மின்சார வாரிய ஊழியர்களில் நாளைய தினம் வேலை நிறுத்தத்தில் பங்கேற்போர், பணிக்கு வராதோர், விடுப்பில் இருப்போரின் விவரங்களை சேகரிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.







