முக்கியச் செய்திகள் சினிமா

சிம்பு படம் வெளியாக தடை இல்லை – சென்னை உயர்நீதிமன்றம்

2018ம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறி எடுக்கப்பட்டுள்ள வெந்து தணிந்தது காடு படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் சிம்பு நடித்து நாளை வெளியாக உள்ள வெந்து தணிந்தது காடு படத்தை வெளியிடத் தடை கோரிய வழக்கில் இரு தரப்பினருக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டுள்ளதால், படம் வெளியாவதற்கு எந்த தடையும் இல்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நடிகர் சிம்பு நடித்து இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்துக்குத் தடை விதிக்க கோரி ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடிக்க சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் படத்தைத் தயாரிக்க இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முன் பணமாக 2 கோடியே 40 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களிடம் கூறிய அதே கதையை வெந்து தணிந்தது காடு என்ற பெயரில் படமாக எடுத்து, நாளை வெளியிட இருப்பதாகவும், தங்களுக்குத் தரவேண்டிய இரண்டு கோடியே 40 லட்சம் ரூபாய் பணத்தைத் தராமல் படத்தை வெளியிடக் கூடாது எனத் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெ.மணிகண்டன், 2018ம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறி எடுக்கப்பட்டுள்ள வெந்து தணிந்தது காடு படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரேவதி, ஒப்பந்தம் செய்தது உண்மைதான் என்றும் அடுத்த படத்தை இயக்கும் முன் மனுதாரருக்கு வழங்க வேண்டிய பணத்தைத் திருப்பி வழங்கி விடுவதாகவும், இது சம்பந்தமாக மனுதாரருடன் சமரசம் செய்து கொள்வதாகவும் தெரிவித்தார்.

சமரசம் செய்து கொள்ள மனுதாரர் தரப்பில் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, பணத்தைத் திருப்பி கொடுப்பது தொடர்பான உத்தரவாதத்தைப் பதில் மனுவாகத் தாக்கல் செய்யும்படி கவுதம் வாசுதேவ் மேனன் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையைச் செப்டம்பர் 21ஆம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளார். இதனால் நாளை இந்த படம் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை. எனவே சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விக்ரம் படம் எப்போது? – லோகேஷ் கனகராஜ் ட்வீட்

Arivazhagan Chinnasamy

போதை விழிப்புணர்வு கூட்டத்தில் பேசிய நடிகர்; கண்ணீர் விட்டு அழுத மாணவிகள்

EZHILARASAN D

பள்ளிகளுக்கு மத்திய அரசு சான்றிதழ் கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை

Gayathri Venkatesan