”சித்திரை திருவிழாவில் சாதிய பாகுபாடு இல்லை” – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் பாராட்டு!

சித்திரை திருவிழாவில் சாதிய பாகுபாடு இல்லை என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கோயில் திருவிழாவின்போது பட்டியலின மக்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சண்முகம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

அதே போல் கரூர் மாவட்டம் பகவதி அம்மன் கோயிலில் பட்டியலினத்தை சேர்ந்தவர்களை கோயில் உள்ளே அனுமதிக்காமல்,இரட்டை குவளை கலாச்சாரம் உள்ளது, எனவே உரிய நடவடிக்கை எடுக்க கோரி கரூர் மாவட்டத்தை சேர்ந்த சுப்ரமணி வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்குகள் இன்று(மே.15) நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணை நடைபெற்றது. இதில் கரூர் மாவட்ட ஆட்சியர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நீதிபதிகள்,  “ஒவ்வொருவரின் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும். சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகள் ஆன நிலையிலும் நீதிமன்றத்தில் இது போன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்படுவது வேதனை அளிக்கிறது” என்று கூறினர்.

இன்னும் சில ஊர்களில் சிலர் சட்டை அணிந்து போக முடியவில்லை, தெருக்களில் நடந்து செல்ல முடியவில்லை,அதனை கண்டறிந்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடர்ந்து அரசுத் தரப்பில், “எந்த சாதிய பாகுபாடும் இல்லை. வேறுபாடுகளைக் களையும் வகையிலேயே காலணி என்ற பெயர் நீக்கப்பட்டுள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அரசாணை உள்ளது. இது தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை. புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று வாதிடப்பட்டது.

அதன் பின்பு நீதிபதிகள், “அழகர் மலையிலிருந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க வருவதற்கு வழி நெடுகிலும் வீதி வீதியாக வருகிறார் அனைத்து இடங்களுக்கும் போகிறார். அனைத்து மக்களும் அவரை தூக்குகிறார்கள். ஒன்றோடு ஒன்று ஒருவர் மீது ஒருவர் தண்ணீர் பீச்சி அடிக்கின்றனர். அதிகமான இடங்களில் அன்னதானம் நீர் மோர் வழங்குகிறார்கள். இதில் எங்கேயும் சாதிய பாகுபாடு கிடையாது” என்று பாராட்டி  “அதேபோல் அனைத்து இடங்களிலும் இருக்கலாமே” என்று கருத்து தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.