சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து முதல் நாளே விஜய் ஆளுநரிடம் 5 நிமிடங்கள் பேசினார். எங்கள் கட்சியின் பெயரே தமிழக வெற்றிக் கழகம் தான். தமிழ் தான் எங்களுக்கு முதன்மை என்றார். ஆனால், வந்தே மாதரம் முதலில் பாடப்பட வேண்டும் என தங்களுக்கு சுற்றறிக்கை வந்திருப்பதாக ஆளுநர் தெரிவித்துவிட்டார். சி.ஜோசப் விஜய் என்று சொல்லி ஓட்டு கேட்டு மத அரசியலை தூக்கி எறிந்திருக்கிறார் எங்கள் தலைவர். தமிழ்நாட்டு மக்களும் சாதி, மத அரசியலை தூக்கி எறிந்துவிட்டார்கள். உண்மையாக இன்று தான் சமூக நீதி நாள்.
தமிழக அமைச்சரவை போன்ற ஒரு அமைச்சரவை இந்தியாவிலேயே இல்லை. சமூகநீதி அடிப்படையிலான இந்த அமைச்சரவையை மக்கள் கொண்டாடுகின்றனர். 60 நாட்களில் அனைத்தையும் மாற்றி காட்டுவோம். மிகப்பெரிய நிர்வாக மாற்றம் இருக்கும். பல்வேறு துறைகளில் 35% வரை வசூலிக்கப்பட்ட கட்சி நிதி முறையை ஒழித்துள்ளோம். தூர் வாராமல் வாரியதாக பில் போட முடியாது. பினாமி பில் முறையை ஒழிப்போம். தவறுகளை கண்டறிந்து வருகிறோம். விரைவில் மாற்றுவோம். தமிழகத்தில் ஒரே வாரத்தில் ஒழிந்தது ஊழல்.
பொதுவெளியில் இது போன்ற சொற்களை பயன்படுத்துகிறவர்கள் மீது புகார் கொடுத்தவுடன் நடவடிக்கை எடுக்க காவல்துறையையும் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். பெண்ணுடைய உறவை மையப்படுத்தி ஒரு தலைவரை விமர்சிப்பதா? பெரியார், அண்ணா கற்றுக் கொடுத்த பாடம் இதுவல்ல. திமுக அடிக்கடி சொல்லும்… கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று. இப்போது இந்த மூன்றும் திமுகவிடம் இல்லை.
மக்கள் சாதியின் அடிப்படையில் வாக்களிப்பதில்லை. சாதி பார்த்து தவெக யாரையும் முன்நிறுத்தவில்லை. சாதி அரசியலை தமிழக மக்கள் தூக்கி எறிந்துள்ளனர். ஆனால் அமைச்சர்களின் சாதியை வைத்து எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்கின்றனர். ஆ.ராசாவின் பதிவை நாங்கள் கண்டிக்கிறோம். திருமாவிடம் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்துகிறோம். எல்லாவற்றிற்கும் குரல் கொடுக்கும் கனிமொழி இதனை கண்டிக்க வேண்டும்.
இன்னொரு துறை பற்றி நான் பேசுவது மரபு ஆகாது. மின்சாரத் துறையில் நிறைய கடன் சுமை இருப்பதாகவும் நிலக்கரியில் ஊழல்கள் நடந்திருப்பதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் சொல்லியிருக்கிறார். அவர் அதை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். தினம் 18 மணிநேரத்துக்கு மேலாக உழைத்துக் கொண்டிருக்கிறார். அந்தந்த அமைச்சர்கள் துறை சார்ந்து விளக்கம் தருவார்கள். அதிமுகவின் ஆதரவு பெற்றிருந்தால் எளிதாக எங்களால் ஆட்சியமைத்திருக்க முடியும். ஆனால் மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கைகளில் அரசு உறுதியாக இருந்தது. அதனால் மதச்சார்பற்ற கொள்கையை முன்நிறுத்தி தோழமை கட்சிகளை ஒருங்கிணைத்தோம். அம்பேத்கர், பெரியார், அண்ணா கொள்கைகளில் தவெக அரசு உறுதியாக உள்ளது.
திமுக தலைவரும் உதயநிதி ஸ்டாலினும் தேர்தலில் ஏன் தோற்றோம் என ஆராய்வதற்கு 36 பேர் கொண்ட குழுவை அமர்த்தியிருக்கிறார்கள். இன்னும் அவர்களுக்கு ஏன் தோற்றோம் என தெரியவில்லை. அரசியலில் ஒரு கட்சியை, ஒரு தலைவரை விமர்சிக்கும் போது பெண்களை நோக்கிய ஒரு விமர்சனத்தை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள். அப்படித்தான் ஆ.ராசா அண்ணன் சொல்லவே தயங்கும்படியான ஒரு பதிவை இட்டிருக்கிறார். அறநிலையத்துறைக்கு இந்த சாதியில் இருந்து அமைச்சரை நியமித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தவறாக பிரசாரம் செய்கிறார்கள். ரமேஷை அமைச்சர் ஆக்கும் வரை அவர் என்ன சாதி என்றே எங்களுக்கு தெரியாது என தெரிவித்துள்ளார்.







