லஞ்சம் வாங்கிய தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் தற்காலிக பணியிடை நீக்கம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு

லஞ்சம் வாங்கிய தேனி மருத்துவக் கல்லூரி முதல்வரை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர்.…

லஞ்சம் வாங்கிய தேனி மருத்துவக் கல்லூரி முதல்வரை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இவர்களின் உணவு தேவைக்காக மருத்துவமனை வளாகத்தில் கேண்டின்கள் அமைக்கப்பட்டுள்ளன. கேன்டீன்களின் உரிமம் பெறுவதற்கு தலா 10 முதல் 15 லட்சம் வரை லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. கேண்டின்களின் குடிநீர் இணைப்புகளை கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் துண்டித்ததாகவும், மீண்டும் வழங்க லஞ்சம் கேட்பதாகவும் புகார்கள் எழுந்தன.

இங்கு கேண்டின்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக மூன்று இணைப்புகள்
உள்ளதாகவும், அதனை மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் தன்னிச்சையாக துண்டித்ததாகவும், துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை மீண்டும் வழங்க வேண்டுமானால் தனக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மாரிச்சாமி முதல் தவணையாக ரூபாய் 6.5 லட்சம் மற்றும் இரண்டாவது தவணையாக ரூபாய் 3.5 லட்சம் வழங்குவதாக தானே வீடியோவில் கூறி மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்திடம் வழங்கும் காட்சிகள் வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளன.

இது தவிர அதே வளாகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி முதல்வரின் குடியிருப்புக்கும் மாரிச்சாமி சென்று கட்டு கட்டாக பணம் வழங்கி உள்ளார். அது தொடர்பான காட்சிகளும் தெளிவாக பதிவாகியுள்ளன. மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் 16 லட்சம் ரூபாய் வரை மாரிச்சாமியிடம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையான நிலையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது..

” தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் மீனாட்சி சுந்தரம் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள உணவக உரிமையாளர்  மாரிசாமியிடம் லஞ்சம் கேட்டு பெற்றதாக ஊடகத்தில் வெளியான செய்தியின் அடிப்படையில், தேனி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்  இணை இயக்குனரை நேரில் சென்று உணவக உரிமையாளரிடம் நடைபெற்ற ஊடகத்தில் வெளியான செய்தி உண்மைதானா? என்று விசாரணை நடத்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  உத்தரவிட்டார் .

விசாரணையின் அடிப்படையில், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மீனாட்சி சுந்தரம் லஞ்சம் வாங்கியது உண்மை என்று தெரியவந்த காரணத்தினால், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  உத்தரவிட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.