இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வரும் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் இன்று அவரது 41-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கடந்த 2002-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 2003-ம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறார். 41 வயதாகும் அவர் இதுவரை 690 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்து அணியின் சார்பில் டெஸ்ட் போட்டிகளில் தனிநபராக அதிகபட்சமாக விக்கெட்டுகளை இவர் கைப்பற்றியுள்ளார்.
பொதுவாகவே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு காயங்கள் ஏற்படுவது வழக்கம். ஆண்டர்சன் இதுபோன்ற காயங்களை கடந்து சாதனை படைத்துள்ளார். அதற்காக தன்னை தானே வருத்தி கொண்டுள்ளார். அதற்கான பலனையும் அறுவடை செய்து வருகிறார். அதனால் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை ரசித்து பார்க்கும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர். இந்த சூழலில் தான் ஓய்வு குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது:
“இந்த தொடரில் (ஆஷஸ் 2023) நான் எதிர்பார்த்தது கைகூடவில்லை. அனைத்து வீரர்களும் இது மாதிரியான சூழலை கடந்து வந்தவர்கள் தான். ஆனால் இந்த மாதிரியான பெரிய தொடரில் இல்லாமல் இருந்திருக்கலாம். 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன்னர் இது நடந்திருந்தால் அணியில் எனக்கான வாய்ப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கும்.
இப்போது எனது வயது காரணமாக கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். அணியின் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் நான் அணியில் இருக்க வேண்டுமென விரும்புகிறார்கள். தொடர்ந்து விளையாட விரும்புகிறேன். இப்போதைக்கு இதுவே எனது நிலைப்பாடு” என ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.







