தேனியில் பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், இன்று வரை சிறுமியின் உயிரிழப்புக்கு நீதிகிடைக்கவில்லை என அவரது பெற்றோர் வேதனை தெரிவித்து உள்ளனர்.
தேனி மாவட்டம் ஓடைப்பட்டியில் உள்ள சமத்துவபுரத்தில் பேரூராட்சி சார்பில் பூங்கா அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாகியும் பள்ளத்தை மூடவில்லை என்பதாலும், தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதாலும் ஹாசினி என்ற 8 வயது சிறுமி கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தது. சிறுமியின் உயிரிழப்பு வெளியே தெரிவதற்கு முன்பே அதனை மூடிமறைக்கும் செயலில் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டது. முதலில் உயிரிழந்த சிறுமியின் உடலுக்கு அவசர அவசரமாக உடற்கூறாய்வு செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் உடனடியாக அடக்கம் செய்யும் படி பேரூராட்சி தலைவர் தனுஷ்கோடி சிறுமியின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மூடி மறைக்கப்பட்ட சம்பவத்தை நியூஸ் 7 தமிழ் நேரடியாக பதிவிட்டது. மேலும் இது குறித்து பேரூராட்சி தலைவர் தனுஷ்கோடியிடம் கேட்டபோது, அவர் மலுப்பலான பதில்களை தெரிவித்தார். பின்னர் நியூஸ் 7 தமிழ் செய்தி பட்டி தொட்டி எங்கும் பரவியதையடுத்து, அரசியல் தலைவர்கள் சிறுமி உயிரிழந்ததற்கு குரல் கொடுக்க தொடங்கினர். இந்த விவகாரம் பூதகரமாக வெடித்த நிலையில், மாவட்ட ஆட்சியர் சிறுமியின் தந்தையை வரவழைத்து புகார் மனுவை பெற்று கொண்டார். அதற்கு முன்பு சிறுமியின் தந்தையிடம் பேரூராட்சி தலைவர் பேரம் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமி உயிரிழந்ததையடுத்து, இன்று வரை அரசு அதிகாரிகள் சிறுமியின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லை. மேலும், இழப்பீடு தருவதாக கூறி சிறுமியின் பெற்றோர் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், மகள் இறந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது என்றும் அவருக்கு இழப்பீடு தருவதைவிட தன் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என சிறுமியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த பேட்டியில், சிறுமி உயிரிழப்புக்கு காரணமாக அலட்சியபோக்குடன் செயல்பட்ட ஒப்பந்ததாரர் மீதோ, அல்லது பேரூராட்சி நிர்வாகம் மீதோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தன் குழந்தையை போல் வேறு எந்த குழந்தைக்கும் இதுபோன்ற சம்பவம் நடப்பதற்குள் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகம்?
சிறுமி உயிரிழந்து 4 நாட்கள் ஆன நிலையில், மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என தங்களுக்கு தெரியவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மில்டன் தொலைபேசி வாயிலாக பேட்டியளித்துள்ளார். அதில், பள்ளம் தோண்டி எத்தனை நாட்கள் ஆகியுள்ளது என விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஒப்பந்ததாரர் மீது தவறு உள்ளதா? பேரூராட்சி நிர்வாகம் மீது தவறு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் சிறுமியின் பெற்றோர் முதலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கவேண்டும். பின்னர் அவர் சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளரை தொடர்பு கொண்டு இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என விளக்கமளித்துள்ளார்.
-இரா.நம்பிராஜன்









