சத்தியமங்கலம் அருகே கூலி தொழிலாளியின் வீட்டிற்கு மின் கட்டணம் ரூ. 94,985 என குறுஞ்செய்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மல்குத்திபுரம் தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரேவண்ணா. கூலி தொழிலாளியான இவர் தனது மனைவி காளி மற்றும் குழந்தைகளுடன் சிறிய வீட்டில் வசித்து வருகிறார். இவர் வீட்டிற்கு தனது மனைவி காளி பெயரில் மின் இணைப்பு பெற்றுள்ளார். சமீபகாலமாக இரண்டு மாதத்திற்கு நூறு யூனிட் வரை மட்டுமே இவர்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
100 யூனிட் வரை இலவச மின்சாரம் என்பதால் இதுவரை ரேவண்ணா மின் கட்டணம் செலுத்தியது இல்லை. இந்நிலையில் அவரது செல்போன் எண்ணிற்கு மின் கட்டணம் ரூ. 94,985 செலுத்துமாறு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரேவண்ணா உடனடியாக தாளவாடி மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று இதுகுறித்து அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
இது குறித்து சத்தியமங்கலம் கோட்ட மின் செயற்பொறியாளர் குலசேகர பாண்டியன் விசாரணை செய்து, புகார் குறித்து மின் இணைப்பு மீட்டரை ஆய்வு செய்துள்ளனர். அதில் மின்வாரிய அதிகாரிகள் மின்சார மீட்டர் கணக்கெடுப்பில் கூடுதலாக பதிவாவதாகவும், தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததையடுத்து ரேவண்ணா ஆறுதலடைந்தார்.
-ம.பவித்ரா








