ராமர் கோயிலில் நன்கொடைகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பக்தர்களின் நம்பிக்கையைப் புண்படுத்தியுள்ளதாக உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேற்று கூறினார். மேலும் அவர் அயோத்தியையும் ராம ஜன்மபூமியையும் அவதூறு செய்ய எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் முயற்சி நியாயமற்றது என்றும் கூறினார்.
இந்த நிலையில் தமிழ் நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
“கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்” என்பது போல, ராமர் கோவில் உண்டியல் திருட்டை இப்போது ஒப்புக்கொள்கிறார் யோகி ஆதித்யநாத்.
பக்தர்களின் நம்பிக்கையையும், பணத்தையும் சுரண்டிய பாசிச பாஜகவின் முகமூடி கிழிந்துவிட்டது.
கடவுள் பெயரால் கல்லா கட்டிய உங்களின் ஊழல் நாடகத்திற்கு, வரும் 2029 தேர்தலில் மக்கள் சம்மட்டி அடி கொடுப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கை திருடப்பட்டதாகவும் நன்கொடை வசூலித்ததில் முறைகேடு நடந்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.




