சென்னையில் கடந்த ஆறு ஆண்டுகளாக திருமண விழாக்களில், விலை உயர்ந்த கேமராக்களை திருடி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஐசிஎப் பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளின் போது தங்க நகைகள், விலை உயர்ந்த கேமராக்கள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வந்தது. இந்நிலையில், அஸ்வின் என்பவரின் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான கேமரா திருடு போனது. இதையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமாரா காட்சிகளை ஆய்வு செய்து திருடன் புகைப்படத்தை கண்டறிந்து ஐசிஎப் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அத்துடன் திருடனின் புகைப்படத்தை வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இருப்பினும் திருடன் குறித்த தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு மயிலாப்பூர் பகுதியில் இதுபோல் ஒரு சம்பவம் நடந்திருப்பது தெரிய வந்தது. மேற்கொண்டு விசாரணை நடத்தி வந்ததில் திருடன் வில்லிவாக்கம் பகுதியில் சைக்கிளில் சுற்றி வருவது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த பகுதியில் முகாமிட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சம்சுதீன் என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் கேமரா திருடியதை ஒப்புக்கொண்டார். அத்துடன் கடந்த 2016 முதல் தற்போது வரை சென்னையில் மயிலாப்பூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கொளத்தூர், வில்லிவாக்கம், அம்பத்தூர் என பல்வேறு இடங்களில் 20-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் விலையுயர்ந்த கேமராக்கள், நகை, செல்போன் உட்பட பொருட்களை திருடி உள்ளதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும், தான் பழவியாபாரியாக இருந்த போது போதிய வருமானம் கிடைக்கவில்லை எனவும், சாலையில் கிடந்த செல்போன் ஒன்றை எடுத்து விற்றபோது அதிக தொகை கிடைத்ததால் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








