சென்னை ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து ரயில்வே போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
கடந்த 2-ம் தேதி ப்ரீத்தி என்ற இளம்பெண் மின்சார ரயிலில் பயணம் செய்த போது அவரது செல்போனை இளைஞர் ஒருவர் பறிக்க முயன்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் ப்ரீத்தியை அந்த இளைஞர் ரயிலில் இருந்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்து சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண் இன்று உயிரிழந்தார்.
இதுதொடர்பாக ரயில்வே போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். கடந்த 2ம் தேதி இந்திரா நகர் ரயில் நிலையத்தில் மயக்கம் அடைந்த நிலையில் கிடந்த பெண்ணை பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அந்த பெண்ணின் செல்போன் மாயமானது தெரியவந்தது. பின்னர் அந்த செல்போனை டிராக் செய்த போது ராஜூ என்பவரிடம் இருப்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்த போது செல்போனை 2 ஆயிரம் ரூபாய்க்கு இருவர் அவரிடம் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ்(27) அடையாறை சேர்ந்த மணிமாறன் ஆகிய இருவரை பிடித்து விசாரித்த போது ப்ரீத்தி செல்போனை பறித்ததும், அவரை ரயிலில் இருந்து கீழே தள்ளியதாக தெரிவித்தனர். இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே போலீசார் கூறினர்.





