மத்திய அமைச்சர் வீட்டில் மர்மமான முறையில் இளைஞர் இறந்து கிடந்த உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சராக இருப்பவர் கவுசல் கிஷோர். இவரது லக்னோ வீட்டில் மர்மமான முறையில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தார். சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
லக்னோவில் உள்ள பர்காரிய கிராமத்தில் உள்ள மத்திய அமைச்சர் கவுசல் கிஷோர் வீட்டில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த கிடந்த நபரின் பெயர் வினய் ஸ்ரீவஸ்தா என காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அதிகாலை 4:30 மணி அளவில் நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திலிருந்து காவல்துறை துப்பாக்கியை கைப்பற்றியுள்ளது. இந்த துப்பாக்கி உரிமம் பெற்ற துப்பாக்கி எனவும், இது மத்திய அமைச்சரின் மகனான விகாஷ் கிஷோருக்கு சொந்தமானது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து லக்னோ மேற்கு மாவட்ட காவல்துறை துணை ஆணையர் ராகுல் ராஜ் தெரிவித்ததாவது..
“ வினய் ஸ்ரீவஸ்தா என்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவ இடத்திலிருந்து விகாஸ் கிஷோரின் கைத்துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறோம். இந்த வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் கவுசல் கிஷோர் தெரிவித்ததாவது “ இறந்து நபரின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறோம். சம்பவம் நடைபெற்றபோது நான் வீட்டில் இல்லை. விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.







