‘டிப் டிப் பர்சா’ பாடலுக்கு சேலை கட்டி நடனமாடிய இளைஞர்! கொட்டும் மழையில் தீயாய் பரவும் வைரல் வீடியோ!

‘மொஹ்ரா’ என்ற ஹிந்தி படத்தில் வரும் ‘டிப் டிப் பர்சா பானி’ என்ற பாடலுக்கு, இளைஞர் ஒருவர் மஞ்சள் நிற சேலை அணிந்து பல ஹீரோயின்களையே மிஞ்சும் அளவிலான நடன அசைவுகளுடன் ஆடிய வீடியோ…

‘மொஹ்ரா’ என்ற ஹிந்தி படத்தில் வரும் ‘டிப் டிப் பர்சா பானி’ என்ற பாடலுக்கு, இளைஞர் ஒருவர் மஞ்சள் நிற சேலை அணிந்து பல ஹீரோயின்களையே மிஞ்சும் அளவிலான நடன அசைவுகளுடன் ஆடிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து நாட்டில் பல இடங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சமூகவலைத்தளங்களிலும் மக்கள் பருவமழை தொடர்பான பதிவுகளை தொடர்ந்து பகிர்ந்து வரும் அதேவேளையில், பல வேடிக்கையான வீடியோக்களை உருவாக்கி வெளியிட்டும் வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி பலரின் கவனத்தையும் பெற்று வருகிறது.

அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர், 1994 ஆம் ஆண்டு வெளிவந்த ‘மொஹ்ரா’ என்ற ஹிந்தி படத்தில் இடம் பெற்றிருந்த ‘டிப் டிப் பர்சா பானி’ என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

குறிப்பாக, உதித் நாராயண் மற்றும் அல்கா யாக்னிக் பாடியுள்ள அந்த பாடலில் நடனமாடிய ரவீனா டாண்டன் மற்றும் அக்‌ஷய் குமாரையே மிஞ்சும் அளவுக்கு அந்த இளைஞரின் நாடன அசைவுகள் இருந்ததோடு, மஞ்சள் நிற சேலையில் தண்ணீர் சொட்ட சொட்ட அவர் செய்த நாடன சேஷ்டைகள் பலரையும் கவர்ந்ததால் தொடர்ந்து பலரால் ஷேர் செய்யப்பட்டு, லைக்குகளை குவித்து வருகிறது.

அந்த வீடியோவில் சேலை அணிந்து நடனமாடும் அந்த இளைஞரின் பெயர் நந்த கோபால் என்றும், அவர் ஃபரிதாபாத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. தொழில்முறை நடனக் கலைஞர் ஆன இவர், ஃபேஷன் மற்றும் மாடலிங் மீது அதீத விருப்பம் கொண்டவராம். அதன் அடிப்படையில் இது போன்ற பல வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கோபாலுக்கு 1 லட்சத்து 98 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனர்கள் பின் தொடர்கின்றனராம். குறிப்பாக பெண்கள் உடை அணிந்து நடனமாடும் கோபாலின் இந்த தனித்துவமான பாணியை மக்கள் மிகவும் விரும்புகிறார்கள். இருப்பினும், சில பயனர்கள் அவரை கேலி செய்யவும் தயங்குவதில்லை.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.