முறையாக அனுமதி பெறாத பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானதில், 7ம் வகுப்பு மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் பெரியகோட்டை என்னும் இடத்தில் சார்லஸ் மெட்ரிகுலேசன் என்னும் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. சார்லஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் பயிலும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளி வாகனத்தில் வருவது வழக்கம்.
அந்த வகையில், இன்று காலையில் மாணவர்களை ஏற்றிவந்த வேன், சர்வநேந்தல் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த கண்மாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சம்பவ இடத்திற்கு அருகிலிருந்த பொதுமக்கள் பள்ளி வாகனத்தில் இருந்த மாணவர்களை மீட்டனர். இந்த விபத்தில் முலைக்குளத்தை சேர்ந்த ஹரிவேலன், (வயது 12) என்ற 7ம் வகுப்பு மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவஇடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பள்ளி வாகனம் முறையான அனுமதி பெறவில்லை எனவும், வழக்கமான ஒட்டுநருக்கு பதிலாக மாற்று ஓட்டுநர் வாகனத்தை இயக்கியதும் தெரிய வந்தது.
காயமடைந்த மாணவர்களை காண அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். உயிரிழந்த மாணவர் ஹரிவேலனின் தாயார் கண்ணீருடன் குமுறி அழுதது அங்கிருந்தவர்களை நிலைகுலைய செய்தது. பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே விபத்திற்கு காரணம் என பெற்றோர் குற்றம் சாட்டினர்.










