17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மாவட்ட போஸ்கோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 24). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் கடந்த 2019 அன்று கலியபெருமாள், அந்த மாணவியை சாமியார்பேட்டையில் உள்ள தனது நண்பர் அய்யப்பன் என்பவரது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது, அய்யப்பன் அவர்களது செலவுக்கு பணம் கொடுத்து, அவர்களை திருப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு சென்ற கலியபெருமாள் அந்த மாணவியை திருமணம் செய்து, வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்ததோடு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பான வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் மாவட்ட போஸ்கோ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அப்போது, நீதிபதி எழிலரசி குற்றம் சாட்டப்பட்ட கலியபெருமாளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு சமூக பாதுகாப்பு துறையின் சமூக நல நிதியில் இருந்து ரூ.5 லட்சம் இழப்பீடாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் 30 நாட்களுக்குள் வழங்கவும் உத்தரவிட்டார்.
– இரா.நம்பிராஜன்








