கொச்சி வாட்டர் மெட்ரோ திட்டத்தை பார்த்து உலக நாடுகள் விரைவில் செயல்படுத்தும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று மாலை மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சிக்கு வருகை தந்தார். கேரள கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வேட்டி, சட்டையை பிரதமர் அணிந்திருந்தார். கொச்சி கடற்படை தளத்தில் இருந்து நடைபயணமாக செல்லும் பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கேரளாவில் முதன் முறையாக திருவனந்தபுரம் -காசர்கோடு ரயில் வழி பாதையில் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கொடியசைத்து துவங்கி வைத்தார்.
819 கோடி ரூபாய் மதிப்பில் 78.2 கி.மீ. தூரம் நீர் வழி பாதைகளில் உள்ள தீவு பகுதிகளை இணைக்கும் இந்தியாவிலேயே முதல் முறையாக அமைக்கப்பட்ட கொச்சி வாட்டர் மெட்ரோ சேவையை சென்ட்ரல் ஸ்டேடியத்தில் வைத்து பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார். அதன் பின் திண்டுக்கல்-பழனி-பாலக்காடு இடையே ரயில் மின் பாதை திட்டம் துவங்கி வைத்தார்.
தொடர்ந்து, திருவனந்தபுரம், கோழிக்கோடு, வர்க்கலா, சிவகிரி ரயில் நிலையங்களை மேம்படுத்த அடிக்கல் நாட்டினார். திருவனந்தபுரத்தில் டிஜிட்டல் அறிவியல் பூங்காவிற்கு அடிக்கல் என மொத்தம் ரூ.3200 கோடி மதிப்பில் எட்டு திட்டங்களில் ஆறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கேரளாவில் வந்தேபாரத் ரயில், கொச்சி வாட்டர் மெட்ரோ உள்ளிட்ட திட்டங்கள் துவங்கி வைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கேரள மக்கள் முன் எச்சரிக்கை உள்ளவர்கள், படிப்பறிவு உள்ளவர்கள். இன்றைய தினம் இந்திய மற்றும் உலக அரங்கில் நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். உலக அளவில் இந்தியாவிற்கு நல்ல அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அதிகம் மேம்படுத்தி வருகிறோம். இதற்காக 10 லட்சம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளோம். இந்தியாவில் கொச்சி வாட்டர் மெட்ரோ திட்டத்தை பார்த்து உலகின் மற்ற நாடுகளும் இதை விரைவில் செயல்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.
கேரளாவிற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கான், முதலமைச்சர் பினராயி விஜயன், காங்கிரஸ் எம்பி சசி தரூர் உள்ளிட்டோர் வரவேற்றனர். காங்கிரசின் ஒரு பிரிவினர் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சசி தரூர் எம்பி வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளது குறிப்பிட்டதக்கது.








