தமிழ்நாட்டின் முகவரி மு.கருணாநிதி, அரசியல் தலைவர்களில் காந்திக்கு பிறகு அதிக பக்கங்கள் எழுதியவர், தமிழை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு கொண்டாடப்படும் வேளையில், விகடனுடன் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது என்பதை விளக்கும் வகையில், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் மற்றும் விகடன் குழும இதழ்களில் வெளியான அவர் தொடர்பான செய்திகள், அவர் அளித்த பேட்டிகள் அனைத்தும் காலவரிசைப்படி சரமாகத் தொடுக்கப்பட்டு `கலைஞர் 100… விகடனும் கலைஞரும்’ என்ற நூல் தயாராகியுள்ளது. இந்த நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த நூலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, முதல் பிரதியை நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து விழாவில் பேசிய கமல்ஹாசன், ”தமிழ்நாட்டின் முகவரி மு.கருணாநிதி. ஜனநாயகம், சமூகநீதி, கூட்டாட்சி என தென்னாட்டின் முக்கிய முகமாகத் திகழ்கிறார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் ஒரு பத்திரிகையாளர் தான். அரசியல் தலைவர்களில் காந்திக்கு பிறகு அதிக பக்கங்கள் எழுதியவர் கருணாநிதி தான். தமிழை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் கருணாநிதி.
https://twitter.com/news7tamil/status/1704485549942206974
தாழக்கிடப்பவரை தற்காப்பதுதான் தர்மம், கலைஞரின் தர்மம் அதுதான். கடந்த நூற்றாண்டின் 50 ஆண்டுகள் பெரியார், அண்ணா ஆகியோருக்கானவை என்றால், அடுத்த 50 ஆண்டுகள் கலைஞர் யுகம் எனலாம். `போராடு’ என்பதுதான் கலைஞரின் வாழ்க்கை. `பள்ளிக்கு அனுமதி அளிக்கவில்லையென்றால் குளத்தில் குதிப்பேன்’ எனப் போராடியதில் அவரது வாழ்க்கை தொடங்கியது. இரண்டு முறை ஆட்சிக் கலைப்பு, இரண்டு முறை கட்சிப் பிளவு, மிசா, நள்ளிரவில் கைது, மரணத்துக்குப் பிறகும் தனக்கான இடம் கேட்டுப் போராட்டம் என குளவிக்கூட்டின் புழுப்போல கொட்டப்பட்டு தயாரானவர்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.







