வெள்ளை அறிக்கைக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கும் சம்பந்தமில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அரியலூர் வாலாஜா நகரம் ஊராட்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரும் உடன் இருந்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டின் நிதிநிலையை பொதுமக்கள் அறிந்துகொள்ளவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனைக்கும் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதற்கும் சம்பந்தம் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 12 மருத்துவ கல்லூரிகளிலும் நடப்பாண்டிலேயே மாணவர் சேர்க்கை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்த அமைச்சர், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின் பேசிய அவர், கடந்த 2011-ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், ஆனால் அடுத்த வந்த ஆட்சியாளர்களின் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக அது நிறைவேற்றப்படவில்லை எனவும் கூறினார். இதனையடுத்து பெரம்பலூரில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்தார்.








