பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “விளை நிலங்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத் தான் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக நேற்றைக்கு அறிவித்த தவெக அரசு. இன்று அதே இடத்தில் “மற்ற தொழில் திட்டங்களை துவங்குவோம் என்று கூறுவது. முன்னுக்குப் பின் முரணானது. கடும் கண்டனத்திற்குரியது.
காரணம், விமான நிலையம் கட்டுவதற்காக பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட சுமார் 1700 ஏக்கர் நிலங்களில், சிப்காட் போன்ற தொழில் திட்டங்களே துவங்க முடியும் என்பது தான் நிதர்சனம். அப்பொழுது மட்டும் பரந்தூரின் விளை நிலங்கள் பாதுகாக்கப்படுமா? முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு உண்மையிலேயே பரந்தூர் விவசாயிகளின் மீது அக்கறை இருந்தால். கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அதன் உரிமையாளர்களிடம் தானே மீண்டும் ஒப்படைக்க வேண்டும்? அதற்கு சட்டத்தில் வழியில்லை என்பது தெரிந்தும், அங்கே விமான நிலையம் கட்ட அனுமதிக்க மாட்டோம் ஆனால் தொழில் திட்டங்களை துவங்குவோம் என்று கூறுவது வீண் விதண்டாவாதம்.
மேலும், நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013 இல் உள்ள பிரிவு 99 இன் படி, “unforeseen circumstances நடந்தால் மட்டுமே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வேறு பொது நோக்கத்திற்கு பயன்படுத்த முடியும். அப்படியிருக்கையில், விமான நிலையத் திட்டத்தை அவசர அவசரமாக கைவிடுமளவிற்கு பரந்தூரில் இப்பொழுது என்ன “எதிர்பாரா சூழ்நிலை வந்துவிட்டது? அதிலும். “Greenfield Airport” என்ற குறிப்பிட்ட நோக்கத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை. முற்றிலும் வேறு நோக்கத்திற்கு பயன்படுத்த எந்த சட்ட அதிகாரத்தின் அடிப்படையில் தவெக அரசு துணிகிறது?
அதுமட்டுமன்றி ஒரு காலத்தில் தமிழகத்தில் இருந்து லண்டனுக்கு சென்று, அங்கிருந்து தான் “Overseas”நாடுகளுக்கு செல்ல வேண்டியிருந்தது. அந்த நிலை படிப்படியாகக் குறைந்து தற்போது தமிழகத்தில் இருந்து பெங்களூர் சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறோம். ஆனால், பரந்தூர் விமான நிலையம் தமிழகத்தில் அமைந்தால், இந்த நிலை முற்றிலுமாக மாறும். தமிழகத்தில் இருந்தே நாம் வெளிநாடுகளுக்கு மிக எளிதாக பயணிக்க முடியும்.
மேலும், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய மூன்று எல்லைப் பகுதிகளை இணைக்கும் விதத்தில். சித்தூர் மாவட்டத்தின் குப்பம் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி வருகிறது ஆந்திர அரசு. பெங்களூர் மற்றும் சென்னை விரைவுச் சாலைக்கு மிக அருகில் அமையப் போகும் இந்த விமான நிலையத்தால், பெரும் தொழில் நிறுவனங்களின் பார்வை ஆந்திராவை நோக்கி திரும்புவதற்கு வாய்ப்புள்ளது. வணிகப் போக்குவரத்து ஆந்திர மாநிலத்தின் கட்டுக்குள் சென்று விடும் அபாயமும் உள்ளது.
எனவே. தலைநகர் சென்னையிலோ அல்லது அதற்கு மிக அருகிலேயோ தமிழகத்திற்கு ஒரு புதிய விமான நிலையம் தற்போது அவசியமான ஒன்று. பயணப் போக்குவரத்து, மணலின் தன்மை, Need & Demand மற்றும் பல அம்சங்களையும் கோணங்களையும் ஆராய்ந்ததன் அடிப்படையில் விமான நிலையம் அமைக்க ஏற்கனவே தேர்வு செய்யப்பட பரந்தூரை புறந்தள்ளிவிட்டு, புதிய இடத்தை இனி தேடி கண்டுபிடித்து. ஆய்வுகள் செய்து பணிகளைத் துவங்குவது என்பது முழுக்க முழுக்க நேர விரயம். திட்டமிடப்பட்ட தாமதம்.
எனவே, தனது அரசியல் ஆதாயத்திற்காக. மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் கூட “எடுத்தோம். கவிழ்த்தோம் ” என முதல்வர் விஜய் செயல்படுவது தமிழகத்தின் வளர்ச்சிக்கு உகந்ததல்ல. அரசியல் வேறுபாடுகளை கடந்து, தமிழகத்தின் வளர்ச்சிக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்!” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




