பல் பிடுங்கிய விவகாரம்… சர்ச்சையான காவல் நிலையங்களில் முறையாக பராமரிக்கப்படாத சிசிடிவிக்கள்… ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல்கள்… இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்…
விசாரணை கைதிகளை சித்ரவதை செய்து பற்களை பிடுங்கிய சம்பவத்தில் நாள் தோறும் ஒரு சர்ச்சைகள் வெளியாகி கொண்டு இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக துறைரீதியிலான விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் அம்பை காவல் நிலையத்தில் சிசிடிவிக்களில் காட்சிகள் பதிவாகவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில் சமூக ஆர்வலர் பாண்டியராஜன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பினார். அவர் கேட்ட கேள்விகளுக்கு 48 மணி நேரத்திற்குள் பதில் அளிக்க வேண்டிய இந்த சட்டத்திற்கு மூலமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு மிகவும் காலதாமதமாகவே காவல்துறை பதில் வழங்கியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நான்கு மகளிர் காவல் நிலையங்கள் உட்பட 37 காவல் நிலையங்களில் சுமார் 213 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மிக முக்கியமாக பல்புடுங்கப்பட்ட விவகாரத்தில் சிக்கி உள்ள அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் வெறும் மூன்று கண்காணிப்பு கேமராக்கள் மட்டும் பொருத்தப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக தெரிய வந்துள்ளது.
இரவு நேரங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் தெளிவாக செயல்படும் வகையிலான கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும் என்ற நிலையில் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் இரவு நேரங்களில் தெளிவாக காட்சிகளை பதிவு செய்யும் தகுதி உடைய கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கும் ஒன்று.
18 மாதங்கள் வரை கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் சேமித்து வைத்திருக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி காவல்துறையினர் செயல்பட்டுள்ளனர். அங்கு 150 நாட்கள் வரை மட்டுமே பதிவாகும் காட்சிகளை சேமித்து வைக்க முடியும் என்ற நிலையில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதா தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. பெயரளவிற்கு மட்டுமே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் இருப்பதில் நெல்லை மாவட்ட காவல்துறை செயல்பட்டு வருவதாக மக்கள் கண்காணிப்பகம் கடுமையாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
குற்றவாளிகளை கண்டறியவும், குற்றங்களை தடுக்கவும் சிசிடிவிக்களை பொருத்தும்படி விழப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல்துறையினரே சிசிடிவிக்கள் தொடர்பாக காவல் நிலையங்களில் உச்சநீதமன்ற உத்தரவை முறையாக பின்பற்றாமல் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.







