அப்கானிஸ்தான், அரியானா செய்தி தொலைக்காட்சியில் பணிபுரியும் 2 பத்திரிகையாளர்களை காரணம் ஏதும் சொல்லாமல் தலிபான்கள் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட இரான் இண்டர்னேஸ்னல் நியூஸ் நிறுவனத்தை சேர்ந்த Tajuden Soroush, அரியானா டிவியில் பணிபுரியும் வாரிஸ் ஹஸ்ரத் மற்றும் அஸ்லம் ஹெஜாப் எனும் இரண்டு பத்திரிகையாளர்களை தலிபான்கள் கைது செய்துள்ளனர். ஆனால் இந்த கைது குறித்து எந்த வித தகவலையும் அவர்கள் கூறவில்லை. பத்திரிகையாளர்களை தாலிபன்கள் எதற்காக கைது செய்தார்கள் என்றும் தெரியவில்லை. கைதுக்கு முன் அரியானா டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விருந்தினர் ஒருவர் தலிபான்கள் குறித்தும் அவர்களது நடவடிக்கைகள் குறித்தும் விமர்சனம் செய்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த தலிபான்களின் நடவடிக்கைதான் கைதா என்பது தெரியவில்லை.
இதுகுறித்து அப்கானிஸ்தான் ஊடகங்கள் கேள்வி எழுப்பிய பின்னரும் எந்த ஒரு பதிலையும் தாலிபன்கள் கொடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்து கேட்ட UNAMA, எந்த காரணத்தையும் சொல்லாமல் பத்திரிகையாளர்களை கைது செய்துள்ள தலிபான்கள் முறையாக பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. தொடர்ந்து, தலிபான்களின் இத்தகைய நடவடிக்கை முற்றிலும் நியாயப்படுத்த முடியாதது என்ற கருத்தை சர்வதேச மன்னிப்பு சபை குறிப்பிட்டதுடன் பத்திரிகையாளர்களை விரைந்து விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. மேலும் இது போன்ற பத்திரிகையாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பத்திரிகை துறையின் சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் தலிபான்களை வலியுறுத்தியுள்ளது. பத்திரிகையாளர்களின் மீது தலிபான்களின் இந்த திடீர் நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







