’நாட்டில் அடிமை சின்னங்கள் அகற்றப்பட்டுவிட்டன’ – குடியரசு தலைவர் திரெளபதி முர்மு

இந்தியாவில் அடிமை சின்னங்கள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன என்று குடியரசு தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுகூட்டத்தில்…

இந்தியாவில் அடிமை சின்னங்கள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன என்று குடியரசு தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுகூட்டத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அவரது உரையில், ‘அரசு அனைத்து வகுப்பினருக்கும் எந்த பாகுபாடும் இன்றி உழைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அரசின் முயற்சியின் பலனாக, பல அடிப்படை வசதிகள் 100 சதவீத்தை எட்டியுள்ளன.

அந்தமான் நிக்கோபாரில் உள்ள ஒரு தீவு நேதாஜிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பல தீவுகளுக்கு வீரர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து அடிமைச் சின்னங்களும் அகற்றப்பட்டுவிட்டன.

இந்தியா தனக்கு தேவையான ஆயுதங்களையும், போர் விமானங்களையும் தயாரிப்பதுடன் மற்ற நாடுகளுக்கும் வழங்கி வருகிறது. செல்போன்களை இறக்குமதி செய்யும் நிலையில் இருந்து, தற்போது நாமே உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நிலைக்கு மாறியிருக்கிறோம். முன் எப்போதும் இல்லாத வகையில் தொழில்முனைவோருக்கு அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது.

இன்று நமது இளைஞர்கள் தங்கள் புதுமையின் ஆற்றலை உலகுக்குக் காட்டுகிறார்கள். அக்னி வீரர்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கு தங்களது முழு பங்களிப்பையும் அளித்து வருகின்றனர். அரசின், புதிய முயற்சிகளின் விளைவாக, நமது பாதுகாப்பு ஏற்றுமதி ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.

2014 ஆம் ஆண்டு முதல், 2022 ஆம் ஆண்டு வரை நாடு முழுவதும் 260 மருத்துவக் கல்லூரிகளை அரசு கட்டியது. பசுமை எரிபொருள் நாடுகளில், நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது. நாடு முழுவதும் 27 இடங்களில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகின்றன. உலகின் மிகப்பெரிய மின்சார ரயில் நெட்வொர்க் என்ற நிலைக்கு, இந்திய ரயில்வே வேகமாக முன்னேறி வருகிறது.

ஆப்கானிஸ்தானில் பூகம்பமும், இலங்கையில் பொருளாதாரம் பிரச்சனையோ எது வந்தாலும், இந்தியா உலக நாடுகளுக்கு உதவி வருகிறது. ஒருபுறம், நமது புனித யாத்திரை மையங்கள் மற்றும் வரலாற்று பாரம்பரியத்தை மேம்படுத்துகிறோம். மறுபுறம், இந்தியா உலகின் மிகப்பெரிய விண்வெளி சக்தியாக மாறி வருகிறது. இந்தியாதான் முதல் தனியார் செயற்கைக்கோளையும் ஏவியது. இந்திய விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பிரகாசித்து நம்மை பெருமைப்படுத்தியுள்ளனர்’ என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.