தர்மம், நீதி வென்றுள்ளதை உச்சநீதிமன்ற தீர்ப்பு காட்டுகிறது என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை இபிஎஸ் தரப்பிடம் அளிக்க பிறப்பிக்கப்பட்ட உயர்நீதிமன்றத்தின் ஆணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், சேலம் மாவட்டம், எடப்பாடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்களை ஏமாற்றி விட்டார். அரசு அதிகாரிகள் மிரட்டப்படுகின்றனர். சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது.
எடப்பாடி சட்டமன்ற தொகுதி சார்பாக முதல்வருக்கு 10 கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது. அவரால் என்ன செய்ய முடியும் என்று பார்க்காலம் சட்டமன்ற உறுப்பினர் நிதியே வழங்கப்படவில்லை.
ஏற்காட்டில் பெய்த கனமழையால் எடப்பாடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு, தர்மம் நீதி வென்றுள்ளதை காட்டுகிறது. புகழேந்தி யார் ? அதிமுகவிலிருந்து அடிப்படை உறுப்பினர் கூட இல்லை.
மக்கள் சக்தி இல்லாதவர். தகுதியான நபர் அவர் கிடையாது. கவுன்சிலர் தேர்தலில் கூட வாக்கு வாங்கவில்லை. ஊடகங்கள் தான் அவரை பெரிது படுத்துகின்றன என்றார் எடப்பாடி பழனிசாமி.
முன்னதாக, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சார்பில் உதவிகளை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கினார்









