மனிதனை ஆக்கிரமித்த செல்போன்

“நிறைய பேசுங்கள் போனில் அல்ல… நேரில்… உணவு மேஜையில் இருந்து, உங்கள் செல்போனை தள்ளியே வையுங்கள்” இவ்வாறு மக்களுக்கு அறிவுறுத்தியது யார் தெரியுமா? போப் ஆண்டவர் தான். கடந்த 2019 டிசம்பர் 29-ம் தேதி,…

“நிறைய பேசுங்கள் போனில் அல்ல… நேரில்… உணவு மேஜையில் இருந்து, உங்கள் செல்போனை தள்ளியே வையுங்கள்”

இவ்வாறு மக்களுக்கு அறிவுறுத்தியது யார் தெரியுமா?

போப் ஆண்டவர் தான். கடந்த 2019 டிசம்பர் 29-ம் தேதி, ரோம் நகரின் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் திரண்ட பொதுமக்களிடையே பேசுகையில், அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மனிதர்களை செல்போன்கள் ஆட்டிப் படைக்கும் ஆயுதமாக மாற்றிவிட்டதே, போப் ஆண்டவரின் ஆதங்கத்திற்கு காரணம்.

2017 நவம்பரில் பொதுமக்களிடையே பேசும்போதும், போப் பிரான்சிஸ் இத்தகைய கருத்தை முன்வைத்துள்ளார். தன்னை நோக்கி ஏராளமான செல்போன்கள் உயர்த்தி பிடித்திருப்பது மற்றும் பிஷப்களும் செல்போனில் புகைப்படம் எடுப்பது, தனக்கு கவலை அளிப்பதாக உள்ளது, என்று கூறியிருந்தார்.

2021 ஜூலை 18-ம் தேதி பேசும்போது, வாழ்க்கையை ஆக்கிரமிக்கும் செல்போன் போன்ற நவீன கருவிகளிடம் இருந்து, மக்கள் சற்று தள்ளியிருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மக்கள் தங்கள் குடும்ப உறவை மெல்ல தொலைத்து வருவதாக, அவர் பலமுறை கவலையுடன் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம், அன்றாடம் தகவல்களை பரிமாறும் போப், தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் பொதுமக்களை தன்னுடன் செல்பி எடுக்கவும் அனுமதிப்பவர். எனினும், செல்போன் பயன்பாட்டை நாம் கட்டுப்படுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டதாக, அவர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.

ஆம். இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில், செல்போன் என்பது அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. அதேநேரத்தில், செல்போனுக்கும் இணையத்திற்கும் மனிதர்கள் பெரிதும் அடிமையாகிவிட்டதாக, ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து, இணையப் பாதுகாப்பு தொடர்பான, அமெரிக்காவை சேர்ந்த மென்பொருள் நிறுவனமான நார்டான் லைப்லாக் நடத்திய ஆய்வில், மொபைல் போன் பயன்படுத்தும் இந்தியர்களில், மூன்றில் இருவர் அதாவது சுமார் 66 சதவீதம் பேர், அதற்கு அடிமையாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் விற்பனைக்கு இந்தியாவில் மிகப்பெரிய சந்தை உண்டு என்பதை உணர்ந்துகொண்டே, உலகின் அத்தனை முன்னணி நிறுவனங்களும், இந்தியாவில் செல்போன் தயாரிப்பு மற்றும் விற்பனையை நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. தற்போது நம் நாட்டில் புத்தாண்டு, தீபாவளி போன்ற பண்டிகை நாட்கள், பிறந்தநாள் போன்றவற்றின் போது, புதிய செல்போன் வாங்குவது ஒரு வழக்கமாகிவிட்டது. இதை குறிவைத்து பல்வேறு இணைய வர்த்தக நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்து, விற்பனையில் பல நூறு கோடி ரூபாயை குவித்து வருகின்றன.

கொரோனா ஊரடங்கு தொடரும் நிலையில், கல்வி மற்றும் வேலை தொடர்பான பணிகளை தவிர்த்து, இந்தியர்கள் தினமும் சராசரியாக நான்கரை மணி நேரம், செல்போனில் செலவிடுகின்றனர் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், இதனால் உடல் மற்றும் மனநல பாதிப்புகள் ஏற்படுவதையும், அவர்கள் உணர்ந்திருப்பதாக பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.

செல்போன்களில் அதிக நேரம் செலவிடுவதால், அதன் வெளிச்சம் கண், மூளை ஆகியவற்றை கடுமையாக பாதிப்பதுடன், மனச்சோர்வு, தூக்கமின்மை போன்றவற்றையும் ஏற்படுத்துகிறது. அந்தவகையில், மனித சக்தியை மறைமுகமாக செல்போன்கள் வீணடிப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.