முக்கியச் செய்திகள் சினிமா

சினிமாவிற்காக வாழ்க்கையை தொலைத்தவரின் கதை

‘ஒரு கதாநாயகனின் டைரியில் எனது பெயர்’ என இயக்குநர் ஏகாதசி உருக்கமான செய்தி ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

“23 ஆண்டுகளுக்கு முன் மதுரை மாவட்டம் செக்கானூரணியில் ஒரு அழகான 16 வயது பையனை “செங்கதிர்” அச்சகத்தில் பார்த்தேன். அவன் பெயர் அலெக்சாண்டர். அப்போது நான் சென்னை வந்திருக்கவில்லை. நான் அந்த ஊருக்கு அருகில் உள்ள பணியான் கிராமத்தைச் சேர்ந்தவன். அந்த அச்சகம் நண்பர் தேவராஜ் அவர்களுடையது. கவிதைகள், போஸ்டர்கள் அச்சடிக்க அடிக்கடி நான் செல்வதுண்டு. நான் அங்கே செல்கிற போதெல்லாம் தம்பி அலெக்ஸோடு பிரியமாகப் பேசுவேன். அவனும் என் மீது மிகுந்த அன்பு காட்டுவான்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நான் 1999-ல் சென்னை வந்து சினிமா துறையில் உதவி இயக்குநராகப் பணிசெய்து கொண்டிருந்தேன். 2008-ஆம் வருடம் அலெக்ஸ் சென்னை வந்து தங்கி திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்புத் தேடி அலைந்தான். என்னை வந்து அடிக்கடி சந்தித்தான். நான் அறிவுரை சொன்னேன் கேட்கவில்லை. ஒரு ஹோட்டலில் நண்பர் மூலமாக வேலைக்குச் சேர்ந்து விட்டேன். அதையும் அவன் பயன்படுத்திக் கொள்ளாமல் வெளியே வந்துவிட்டான். 2010-ல் நான் இயக்குநர் ஆனேன். என் முதல் படமான “கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை” யில் நடிக்கவைத்தேன். மனோபாலாவின் காமினேஷனில் வசனம் பேசி நடித்தான். அதன் பிறகு வேறு எந்தப் படத்திலும் நடித்ததாகத் தெரியவில்லை. சென்னையைச் சுற்றிக்கொண்டு திரிந்தான்.

அண்மைச் செய்தி: இந்தி மொழி குறித்த நடிகர்களின் விவாதம் இணையத்தில் வைரல்

உடல் மெலியத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் அவனைப் பார்க்க எனக்கு பாவம் போல் ஆகிவிட, இவனை அவனது வீட்டில் சேர்த்துவிடலாமென்று நினைத்து முயற்சித்துப் பார்த்தேன் அவனது உறவுக்காரர்களை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதைவிட அவன் என்னிடம், தான் ஒரு அநாதை எனக்கு வீடு வாசல் இல்லை என்ற ஒரு பொய் கதையை நம்ப வைத்தான். கால ஓட்டத்தின் நடுவில் என் வீட்டிற்கு சில முறை வந்து உணவுண்டு சென்றிருந்தான். பலமுறை கைப்பேசி வழியாக நடிக்க வாய்ப்புக் கேட்டிருந்தான். ஆள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டே வந்தான். ஒரு கட்டத்தில் அவனை அறையில் ஒருவர் சேர்த்துக்கொள்ள அச்சப்படும் அளவிற்கு உடல் உடை நடவடிக்கையில் மாற்றம் ஆனது.

25.04.2022 திங்கட்கிழமை காலை 8.45க்கு ராயப்பேட்டை அரசாங்க மருத்துவமனை போலீஸ் ஸ்டேசனிலிருந்து எஸ்.ஐ. பாண்டியன் கைப்பேசியில் என்னை அழைத்து, அலெக்சாண்டர் என்பவர் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் இறந்துவிட்டார். அவர் அருகே யாருமே இல்லை. நான்கு தினங்களுக்கு முன் தேனாம்பேட்டையில் ஒரு சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்தவரை பொதுமக்கள் 108ற்கு தகவல் சொல்லி இங்கே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றிப் போனது என்றார். அவரின் டைரியில் உங்கள் பெயரும் எண்ணும் இருந்தது. அவருக்கு நீங்கள் என்ன வேண்டும். அவரின் உறவுக்காரர்களை உங்களுக்கு தெரியுமா? என்று சில கேள்விகளைக் கேட்க நான் அவன் சொல்லியிருந்த பொய்க் கதையைத் தாண்டி வேறு சொல்ல என்னிடம் ஒன்றுமில்லாமல் போனது. ஏனெனில் அது பொய்க்கதை என்பதே அவன் கதை முடிந்தபின் தான் தெரிந்தது.
எஸ்.ஐ.பாண்டியன் அவர்களிடம் பேசிவிட்டு, அலெக்ஸுக்கு உறவுக்காரர்கள் ஒரு வேளை இருக்கக் கூடுமா என்கிற எதிர் கேள்வியோடு பெரிதாகத் தேடத் தொடங்கினேன்.

லெக்ஸின் சொந்த அண்ணன் கிடைத்தார். அவர் என்னை கைப்பேசியில் “அண்ணே” என்றது அலெக்ஸின் குரலாகவே கேட்டது. விசயத்தை ராயப்பேட்டை எஸ்.ஐ.க்குக் கூறினேன். அவர் எனக்கு நன்றி சொன்னார். அலெக்ஸின் அண்ணன் ராதா கிருஷ்ணனும் உறவுக்காரர் மூவரும் இன்று காலை 6.30க்கு சென்னை வந்து சேர்ந்தனர். நானும் என் நண்பர் அருளும் கிளம்பி அங்கே சென்றோம். அங்கே இருந்த போலீஸ் ஸ்டேஷனில் இருந்த பாண்டியன், பத்தராயன், எஸ்.எஸ்.டேனியல் ஆகிய மூன்று எஸ்.ஐகளும் தன்ராஜ் என்கிற ஒரு காவலரும் எதையும் எதிர்பாராமல் எங்களுக்கு மேலான பொறுப்புடனும் அன்புடனும் சம்பிரதாயங்களை மின்னல் வேகத்தில் செய்து முடித்து “அலெக்ஸை”ஆம்புலன்ஸில் ஏற்றி மதுரை அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு இந்த நேரத்தில் ஒரு செவ்வணக்கம் வைத்துக் கொள்கிறேன்.

தம்பி அலெக்ஸுக்கு நான் இயக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் கொடுப்பதாக இருந்தேன். அவனோ ஒரு ரோஜா மாலை மட்டும் போதும் அண்ணே என்று சென்றுவிட்டான்.

(போயிட்டு வாடா அலெக்ஸ்… நான் உனக்காக வைத்திருந்த கதாபாத்திரத்தில் நாளை எவராவது நடிப்பர் தானே, நான் அவர் முகத்தில் உன்னைத் தேடிக் கொள்கிறேன்.)” இவ்வாறு இயக்குநர் ஏகாதசி சினிமாவிற்காக வாழ்க்கையை தொலைத்தவரின் கதையை பகிர்ந்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,432 பேருக்கு கொரோனா உறுதி

G SaravanaKumar

மீண்டும் மாரி செல்வராஜ் – தனுஷ் கூட்டணியில் புதிய படம்; ரசிகர்கள் உற்சாகம்

Web Editor

கெளதம் கார்த்தியின் ’ஆகஸ்ட் 16, 1947’ – டிரைலர் குறித்த அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

Web Editor