ஜாதி, இன மோதல்களின் ஆரம்பப் புள்ளியினை கண்டுபிடித்து அவற்றை முளையிலேயே அகற்றிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி பள்ளியில் சாதி ரீதியாக மாணவன் சின்னதுரைக்கு சில மாணவர்கள் தொல்லை கொடுத்து வந்த நிலையில், அதுகுறித்து ஆசிரியரிடம் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் சின்னதுரையின் வீடு புகுந்து சின்னதுரையையும், அவரது தங்கையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பள்ளி மாணவர்களிடையே சாதி வெறி இவ்வளவு தீவிரமாக இருப்பது அனைவரையும் பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. பள்ளி மாணவர்களிடையே சாதிவெறியை களைய வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன. இதுகுறித்து பல்வேறு அரசியல் பிரமுகர்கள், திரைபிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பில் பெருமளவு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் மாணவர்கள் உள்ளிட்ட 6 பேரை நேற்று கைது செய்தனர். இந்நிலையில் மேலும் ஒரு சிறுவனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவர் மீது கொலை முயற்சி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒன்பது பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடரபான அறிக்கையில்,
”திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் +2 படித்து வரும் மாணவன் சின்னத்துரையை சக மாணவர்களில் சிலர் கொடூர ஆயுதங்களால் தாக்கி உள்ளதாகவும், காப்பாற்ற வந்த அவரது சகோதரியையும் அம்மாணவர்கள் தாக்கியதால் பலத்த காயமடைந்த 2 பேரும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர்கள் இருவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இந்நிகழ்வில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் சட்டப்படி கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
மாணவர்களின் மத்தியில் நன்னெறி, நீதி போதனை வகுப்புகளை நடத்தி மாணவ சமுதாயம் சகோதரத்துவத்துடன் நடப்பதற்கு அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்க காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும். சட்டத்தின் ஆட்சி நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஜாதி மோதல்களைத் தடுக்க, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து கடுமையாக எச்சரிக்க வேண்டும். அதன்மூலம் ஜாதி, இன மோதல்களின் ஆரம்பப் புள்ளியினை கண்டுபிடித்து, முளையிலேயே அகற்றிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.