குஜராத் மாநிலத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அங்கு பிரபாஸ் பட்டன் பகுதியில் அமைந்துள்ள சோமநாதர் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். தொடர்ந்து பிரதமர் மோடி, கிபி 1026 ஆம் ஆண்டு சோமநாதர் கோயிலின் மீது கஜினி முகமது படையெடுத்து 1,000 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “சோமநாதரின் வரலாறு என்பது அழிவு மற்றும் தோல்வியின் வரலாறு அல்ல, அது வெற்றி மற்றும் புத்துணர்ச்சியின் வரலாறு. அடிப்படைவாத படையெடுப்பாளர்கள் இப்போது வரலாற்றின் பக்கங்களாக சுருக்கப்பட்டுவிட்டனர்.
பல நூற்றாண்டுகளாக பலமுறை அழிக்கப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சோமநாதர் கோவில் இன்று மீள்தன்மை, நம்பிக்கை மற்றும் தேசியப் பெருமையின் சக்திவாய்ந்த சின்னமாக கம்பீரமாக நிற்கிறது.
வெறுப்பு, அட்டூழியம் மற்றும் பயங்கரவாதத்தின் உண்மையான வரலாறு நம்மிடமிருந்து மறைக்கப்பட்டது. அந்தத் தாக்குதல் கோயிலை கொள்ளையடிப்பதற்கான ஒரு முயற்சி என்று நமக்குக் கற்பிக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, சர்தார் வல்லபாய் படேல் சோமநாதர் கோவிலை மீண்டும் கட்டும் சபதத்தை மேற்கொண்டபோது, அவரது பாதைக்கு தடைகள் ஏற்பட்டன.
சோமநாதர் கோயிலின் புனரமைப்புக்குத் தடை ஏற்படுத்த முயன்ற அந்தச் சக்திகள் இன்றும் நம்மிடையே இருக்கின்றன. அத்தகைய சக்திகளைத் தோற்கடிக்க நாம் விழிப்புடனும், ஒற்றுமையுடனும், வலிமையுடனும் இருக்க வேண்டும்.
சோமநாதரின் கதைதான் இந்தியாவின் கதை.. இந்த கோயிலைப் போலவே, அந்நியப் படையெடுப்பாளர்கள் இந்தியாவை பலமுறை அழிக்க முயன்றனர். கோயிலை அழித்ததன் மூலம் தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக அந்த படையெடுப்பாளர்கள் நினைத்தார்கள். ஆனால், 1,000 ஆண்டுகளுக்குப் பிறகும், சோமநாதரின் கொடி இன்றும் உயர்ந்து பறக்கிறது” என்று தெரிவித்தார்.







