நடிகர் தனுஷின் D50 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கிய நிலையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ’வாத்தி’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது.
இதற்கிடையே தற்போது தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்குகிறார். இதற்கு தற்காலிகமாக ‘D 50’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் இப்படத்தில் தனுஷுடன் விஷ்ணு விஷால், ஜெயராம் காளிதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், மேலும் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
எஸ்.ஜே.சூர்யா மற்றும் சந்திப் கிஷான் ஆகிய இருவரும் தனுஷின் சகோதரர்களாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ’பா பாண்டி’ திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் இந்த படத்தை இயக்குவதோடு சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வடசென்னையை மையமாக கொண்ட இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க உள்ளார்.
இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. மேலும் இந்த படத்திற்காக நீண்ட தலைமுடியுடன் இருந்த தனுஷ் மொட்டை அடித்துள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் அதனை அறிவிக்கும் வகையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.







